×

ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நாளை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும், அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஓ.பன்னீர்செல்வம்: பெரும் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், சுகாதாரமற்ற சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள தொற்று நோய்கள் ஆகியவை அறவே நீங்கி, வாடி நிற்போர் எவருமில்லை என்ற நிலை உருவாகும் ஆண்டாக 2024ம் ஆண்டு திகழட்டும். மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். தமிழ்நாட்டில் அந்த மாற்றத்தை மலரச் செய்யும் ஆண்டாக 2024ம் ஆண்டு மலரட்டும்.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங். தலைவர்): கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் பாதிப்பை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய அணுகுமுறையின் காரணமாக அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. மக்களிடையே மதநல்லிணக்கம் சீர்குலைந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பிறக்கப் போகும் இந்த புத்தாண்டில் ஜனநாயக விரோத, பாசிச பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைய வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): கடந்துபோன 2023ம் ஆண்டின் கடைசி மாதங்களில் இயற்கையின் கோர தாண்டவம் தமிழ்நாட்டையே உலுக்கிவிட்டது. தமிழ்நாட்டில், சென்னையிலும், அதனை ஒட்டியுள்ள நான்கு மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களிலும் மழையும் வெள்ளமும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை துன்ப இருளில் தள்ளிவிட்டன. இந்திய உபகண்டத்தில், ஒன்றிய பாஜக அரசு இந்துத்துவா சக்திகளின் எடுபிடியாக ஆட்சி நடத்துகிறது. கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கின்ற அரசாக ஒன்றிய அரசு அமைய வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்போம், கூட்டாட்சிக் கொள்கையைக் காப்போம், மதச்சார்பின்மையைக் காப்போம் என சூளுரைத்து அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): கவலைகளைப் போக்கி மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2024ம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். நாம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிவுக்கு வந்து விட்டன. புத்தாண்டில் புதிய பாதை தெரியும். புதிய வெளிச்சம் பிறக்கும். அவற்றின் உதவியுடன் 2024ம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும்.

கமல்ஹாசன் (மநீம தலைவர்): பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம். புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): 2024 ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும். வளமான தமிழகம், வலிமையான பாரதம் உருவாகும் வகையில், உலக நாடுகளின் ஒற்றுமை மேலோங்கும் வகையில் இப்புத்தாண்டு அமைய வேண்டும்.

அன்புமணி (பாமக தலைவர்): தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யப்பட்டும். புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், மகிழ்ச்சி, வளர்ச்சி, அமைதி, மனநிறைவு, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைப்பதுடன், நமக்கு வெற்றி மீது வெற்றிகளை வழங்கும் ஆண்டாகவும் 2024ம் ஆண்டு அமையும் என கூறி அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): மழை, வெள்ளம், புயல் என பேரிடர்களால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் தமிழக மக்கள் அனைவரின் பொருளாதாரத்தை மீட்கும் ஆண்டாகவும், பொய்த்துப் போன பருவமழை, வரலாறு காணாத வறட்சி, இயற்கைப் பேரிடர்கள் என தன் வாழ்க்கை முழுவதும் துயரத்தை மட்டுமே அனுபவித்து வரும் உழவர் பெருமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஆண்டாகவும் புத்தாண்டு அமையும் என நம்புகிறேன். மலரும் புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயர்வான வாழ்க்கையையும், நீங்காத வளங்களையும், நிறைவான மகிழ்ச்சி மற்றும் மன உறுதியைத் தரும் ஆண்டாக அமையட்டும் என வாழ்த்தி தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எர்ணாவூர் நாராயணன் (முன்னாள் எம்எல்ஏ): 2024ம் ஆண்டு குரோதி ஆண்டாக துவங்குகிறது. உலகெங்கிலுமுள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் வாழ வேண்டும்.

பொன்குமார் (தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சி தலைவர்): மாநில உரிமைகள் பறிப்பு, ஜனநாயக குரல்வளை நெரிப்பு, மத,மொழி அடிப்படையில் அரசியல் போன்ற பல்வேறு இருள் இந்தியாவை சூழ்ந்து இருக்கிறது.  இந்த வேளையில் 2024 ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. இந்த இருளை போக்குவதற்கு ஆங்கில புத்தாண்டு வழிகாட்டட்டும். அனைவரும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

செங்கை பத்மநாபன் (நமதுரிமை காக்கும் கட்சி பொதுச் செயலாளர்): இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து மக்களை மீட்க மீள மத்திய அரசு பாரபட்சமின்றி தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்க அதை தமிழக அரசு திறம்பட நிர்வகிக்க கேட்டுக் கொள்வதுடன் தற்கால தமிழகத்தில் மிகப்பெரிய எரிமலையாக விளங்கிக் கொண்டிருக்கும் சுயநல பிரிவினை அரசியல் சூழ்ச்சியில் தமிழக மக்கள் எரிந்து பொசுங்காமல் இனம் மதம் சாதி மொழி கலாசாரம் பிரிவினையற்று ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக மனித உரிமை மனித நேயம் போற்றி சிந்தித்து செயல்பட்டு அனைத்து சிறப்புக்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ தமிழக மக்களை கேட்டுக் கொள்வதுடன் என்னுடைய மனம்நிறைந்த இப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயேசு அழைக்கிறார் ஊழிய தலைவர் டாக்டர். பால் தினகரன்:நாம் கடந்து வந்த துன்பங்கள் துயரங்கள், பாடுகள் பாரங்கள், கவலைகள் கண்ணீர், வேதனைகள் சோதனைகள், நாசங்கள் மோசங்கள் என்ற பழைய இருள் எல்லாம் மறைந்து, நன்மை, ஆனந்தம், நிம்மதி, சமாதானம் என்னும் புதிய ஒளி பெருகும் ஆண்டாக, 2024 திகழ்ந்திடட்டும், குடும்ப உறவுகள் சீராகட்டும் என இதயபூர்வமாய் வாழ்த்துகிறேன்.

இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர்:2023 தந்த இன்னல்கள் யாவும் மின்னல் வேகத்தில் மறையட்டும். 2024 ஜன்னல் வழியே நம்பிக்கை நட்சத்திர ஒளி பரவட்டும். எதுவும் நம்மை எளிதில் வீழ்த்தி விடாது; இதுவும் நிச்சயம்

கடந்து போகும் என்று சொல்லி 2024 வாழ்த்து சொல்லி வரவேற்போம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் இதேபோல தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, சசிகலா, புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் சேகர், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார், வி.ஜி.சந்தோசம், பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன், சமக தலைவர் சரத்குமார், இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் செளந்திரபாண்டியன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

The post ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : English New Year ,Chennai ,Tamil Nadu ,EDAPPADI PALANISAMI ,ADAMUGA ,NEW YEAR ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...