×

ஆங்கில புத்தாண்டு, பள்ளிகள் தொடர் விடுமுறை எதிரொலி: தமிழக சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்: கடற்கரை, அருவிகளில் உற்சாக குளியல்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்று அலைமோதுகிறது. கடற்கரை, திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியல் போட்டனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா சிறப்பு வாய்ந்த பகுதிகள் உள்ளன. தற்போது புத்தாண்டையொட்டியும், பள்ளி விடுமுறை என்பதாலும் கன்னியாகுமரி கடற்கரைக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இன்று காலையிலேயே வந்தவண்ணம் உள்ளனர்.

அவர்கள் இந்த புதிய ஆண்டின் கடைசி சூரிய உதய காட்சியை கண்டு ரசித்தனர். திரிவேணி சங்கமம் கடற்கரையில் ஏராளமானோர் உல்லாச குளியல் போடுவதையும் பார்க்க முடிகிறது. திரிவேணி சங்கமம் கடற்கரை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறை, கடற்கரையில் உள்ள கடைகள் ஆகியவை சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.மாலை கடைசி சூரிய அஸ்தமன காட்சியை காண உள்ளனர். அதேபோல், நாளை புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காணவும் சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். இதற்காக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த பலரும் கடந்த சில நாட்களாகவே கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ், ஓட்டல்களில் அறை எடுக்க தொடங்கி விட்டனர்.

100க்கும் மேற்பட்ட லாட்ஜுகள், நட்சத்திர ஓட்டல்களில் ஏற்கனவே அறைகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. கடற்கரையில் இன்று காலை முதல் இரவு வரை வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் களைகட்டிவிடும். அருவிக்கரை ஊராட்சி பகுதியில் மாத்தூர் தொட்டிப் பாலம் அமைந்துள்ளது. வறட்சியைத் தீர்ப்பதற்காக 1962ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்ட இப்பாலம் 1966ல் முழுமையாகக் கட்டப்பட்டு நிறைவுபெற்றது.

இதற்கான நீர் பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து கோதையாறு கால்வாய் வழியாகக் கொண்டுவரப்படுகிறது. இந்தப் பாலத்தின் கீழ் பரளியாறு என்ற சிற்றாறு பாய்கிறது. எனவே இது முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. தற்போது விடுமுறைதினம் என்பதால் இந்த பாலத்தை பார்வையிட இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதேபோல் பாலத்தின் கீழே பாய்ந்தோடும் பரளியாற்றில் உற்சாகமாக குளியல் போட்டனர்.
மேலும் குலசேகரத்தில் உள்ள திற்பரப்பு அருவியிலும் இன்று காலையில் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு திற்பரப்பு பகுதியில் அருவியாக கொட்டுகிறது. அருவியில் பலர் ஆனந்த குளியல் போட்டனர்.

மேலும் அருவியின் கீழ் அமைந்துள்ள சிறுவர் நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர். அதேபோல் அருவியின் மேல் தடாகத்தில் பாய்ந்தோடும் கோதையாற்றில் சுற்றுலா பயணிகள் பலரும் படகு சவாரி செய்தனர். கோதையாற்றின் அழகு மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை கண்குளிர பார்த்து ரசித்தனர். இதேபோல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மற்றும் தமிழக சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

ஊட்டியிலும் உற்சாகம்: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் நகருக்கு வெளியே பைக்காரா படகு இல்லம், நீர் வீழ்ச்சி, ஷூட்டிங் மட்டம், பைன் பாரஸ்ட், அவலாஞ்சி டேம், காட்டேரி பூங்கா, டீ அருங்காட்சியகம், கேத்தி பள்ளத்தாக்கு முனை உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த நிலையில் நாளை 2024 புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் அதனை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்துள்ளனர். குறிப்பாக கேரள, கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. புத்தாண்டை கொண்டாட ஊட்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஓட்டல்கள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

சுற்றுலா பயணிகள் வருகையால், ஊட்டி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜ்கள், காட்டேஜ்களில் பெரும்பாலான அறைகள் நிரம்பி விட்டன. அதிக அளவிலான வாகனங்கள் நகருக்குள் வருவதால் முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, கூடலூர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் ஊட்டியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.

The post ஆங்கில புத்தாண்டு, பள்ளிகள் தொடர் விடுமுறை எதிரொலி: தமிழக சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்: கடற்கரை, அருவிகளில் உற்சாக குளியல் appeared first on Dinakaran.

Tags : NEW YEAR ,ARKANSAS ,NAGARGO ,KUMARI DISTRICT ,Kanyakumari ,New Year's Eve ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...