×

திருவாடானை பகுதியில் நெல் அறுவடை இயந்திரம் வாடகை பல மடங்கு உயர்வு

 

திருவாடானை, டிச. 31: திருவாடானை பகுதியில் அறுவடை துவங்கிய நிலையில் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தின் வாடகை பல மடங்கு உயர்ந்து விட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தாலுகா மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. 27 ஆயிரம் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை துவங்கும் நிலையில் உள்ளது. சில கிராமங்களில் அறுவடை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் பெரும்பாலும் அறுவடை இயந்திரத்தின் மூலமாகவே அறுவடை பணிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஒரு மணி நேரத்திற்கு நெல் அறுவடை வாடகை இயந்திரம் ரூ.1500 வசூல் செய்தனர். ஆனால் இந்த ஆண்டு ஏராளமான நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி அறுவடை செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் தண்ணீரில் அறுவடை செய்யும் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த இயந்திரம் தட்டுப்பாடு காரணமாக மணி ஒன்றுக்கு நெல் அறுவடை செய்ய ரூ.3500 முதல் 4000ம் வரை வசூல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் அதிக வாடகை கொடுக்க வேண்டி உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆண்டிவேல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகநாதன் கூறுகையில், கடந்த ஆண்டு டயர் இயந்திரம் மூலம் அறுவடை செய்ய ஒரு மணி நேரத்திற்கு 1500 கொடுத்தோம். இந்த ஆண்டு டயர் இயந்திரம் நிலம் ஈழமில்லாமல் காய்ந்து போயிருந்தால் மட்டுமே அறுவடை செய்ய முடியும். அதனால் ஈரத்தில் அறுவடை செய்யும் இயந்திரம் பயன்படுத்த வேண்டி உள்ளது.

அதை ஒரு மணி நேரத்திற்கு 3 ஆயிரத்து 500 வாங்குகின்றனர். இதனால் மூன்று பங்கு செலவினம் அதிகமாகிறது அதிக வாடகை கொடுத்து அறுவடை செய்தாலும் மழையினால் பாதிக்கப்பட்ட நெல்லை விற்பனை செய்வது மிக கடினம். எனவே நெல் அறுவடை இயந்திரத்திற்கான வாடகையை மாவட்ட நிர்வாகம் நியாயமான முறையில் நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் வேளாண் துறை சார்பில் குறைந்த வாடகையில் அறுவடை இயந்திரம் ஏற்பாடு செய்து தர வேண்டும்’’ என்றார்.

The post திருவாடானை பகுதியில் நெல் அறுவடை இயந்திரம் வாடகை பல மடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Thiruvadan ,Thiruvadan taluka ,Ramanathapuram district ,
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு