×

மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு கூரியர் மூலம் போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து விற்ற 7 பேர் சிக்கினர்

பெரம்பூர்: வடசென்னையில் சமீப காலமாக வலி நிவாரணி மாத்திரைகளை சிலர் போதைக்காக பயன்படுத்தி வருவதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஒப்புதல் இல்லாமல் வழங்க கூடாது, அந்த மாத்திரைகளை மொத்தமாக வாங்குபவர்களின் விவரங்களை மெடிக்கல் ஷாப்பில் உள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டும் என போலீசார் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தனர்.

இதையடுத்து மெடிக்கல் ஷாப்பில் வலி நிவாரணி மாத்திரைகள் வாங்குவதை போதை கும்பல் நிறுத்தியது. தொடர்ந்து ஆன்லைன் மூலம் வட மாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, அதை விற்பனை செய்து வந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது. அந்த வகையில் கூரியர் நிறுவனங்களை போலீசார் தொடர்பு கொண்டு சந்தேகப்படும்படி பார்சல்கள் வந்தால் அருகில் உள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கூரியர் மூலம் போதை மாத்திரைகள் சென்னைக்கு கடத்தி வரப்பட்டு, அதனை சிலர் கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்டி வருவதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எம்.கே.பி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் உத்தரவின்பேரில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போதை மாத்திரை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தொடர்ந்து கொடுங்கையூர், மாதவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கூரியர் நிறுவனங்களை தொடர்பு கொண்டு போலீசார் வட மாநிலங்களில் இருந்து வரும் பார்சல் மற்றும் மாத்திரைகள் குறித்த தகவல்களை கேட்டு அறிந்தனர். இதில் குறிப்பிட்ட சில முகவரிக்கு மகாராஷ்டிராவில் இருந்து பார்சல்கள் வருவதாகவும், அதனை வீடுகளுக்கு டெலிவரி செய்யாமல் குறிப்பிட்ட நபர்கள் நேரில் வந்து வாங்கி செல்வதாகவும் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மாதவரம் கே.கே.ஆர் கார்டன் பகுதியில் உள்ள கூரியர் கம்பெனிக்கு மகாராஷ்டிராவில் இருந்து நேற்று முன்தினம் 3 கூரியர் பார்சல் வந்துள்ளது. வெவ்வேறு முகவரியில் வந்த அந்த கூரியரை பெற்றுக் கொள்ள நேரில் வருகிறோம் என்றும் வீட்டிற்கு அனுப்ப வேண்டாம் எனவும், கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு மர்ம நபர்கள் பேசியுள்ளனர்.

இந்த கூரியர் உள்ளே தடை செய்யப்பட்ட பொருள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் சந்தேகம் அடைந்த கூரியர் நிறுவன ஊழியர்கள் இதுகுறித்து கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கூரியரை வாங்கி பிரித்துப் பார்த்த போலீசார், அதில் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர், கூரியர் கம்பெனியில் இருந்து பேசுவது போல குறிப்பிட்ட 3 முகவரியை சேர்ந்த நபர்களிடம் பேசிய போலீசார், மாறுவேடத்தில் கூரியர் கொடுப்பது போல சென்றனர். அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றபோது போலீசார் கூரியர் வாங்க வந்த நபர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

3 பகுதிகளில் கூரியர் கொடுக்கச் சென்ற இடங்களில் இருந்து போலீசார் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த கிரிஸ்வர் (19), கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (20), கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த சிரஞ்சீவி (24), யானைகவுனி பகுதியை சேர்ந்த ராக்கி (23), அஜய் (எ) கருப்பு அஜய் (23), தண்டையார்பேட்டை அப்பாசாமி கார்டன் 2வது தெருவை சேர்ந்த சூரிய பிரகாஷ் (23), கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த அருண்குமார் (21) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 600 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், மகாராஷ்டிராவை சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை ஆர்டர் செய்து, அதனை கூரியர் மூலம் பெற்று, கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது. குறிப்பிட்ட இந்த மாத்திரைகளை சாதாரணமாக கடைகளில் வாங்கினால் ஒரு அட்டை 400 ரூபாய் வரை விற்கப்படுவதும், ஆனால் வட மாநிலங்களில் இவர்கள் இந்த மாத்திரையை 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கி ஒரு மாத்திரையை 250 லிருந்து 300 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு கூரியர் மூலம் போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து விற்ற 7 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Chennai ,Perambur ,Kodungaiyur police ,North Chennai ,
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!