×

மீஞ்சூர் அருகே தனியார் நிறுவனம் கொட்டும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதி: மறியல் நடத்த சமூக ஆர்வலர்கள் முடிவு

 

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டக்கரை மற்றும் வெள்ளி வாயல் சாவடி ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 200 ஏக்கர் பரப்புள்ள இடத்தை தனியார் நிறுவனம் கையகப்படுத்தி கம்பெனி நடத்தி வருகிறது. இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு கன்டெய்னர் லாரி மூலம் வரும் அட்டைப்பெட்டியில் இருந்து அகற்றப்படும் குப்பைகள், கழிவு பொருட்கள் வெள்ளி வாயல்சாவடி, திருவெற்றியூர் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்லும்போது காற்றில் பறந்து கண்களில் பட்டு விபத்துக்கள் ஏற்படுகிறது.

தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி காற்றில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கொண்டக்கரை மற்றும் வெள்ளி வாயல் சாவடி ஊராட்சி சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் பலமுறை வருவாய்த்துறை, ஒன்றிய அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளுக்கும் புகார் மற்றும் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க ஜனவரி 1ம் தேதி சமூக ஆர்வலர்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வெள்ளி வாயல் சாவடி- கொண்டக்கரை இணைப்பு சாலை பகுதியில் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்.

The post மீஞ்சூர் அருகே தனியார் நிறுவனம் கொட்டும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதி: மறியல் நடத்த சமூக ஆர்வலர்கள் முடிவு appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Ponneri ,Kondkarai ,Velli Vayal ,Savadi ,Meenjur ,Tiruvallur district ,
× RELATED இன்று அதிகாலை பயங்கரம்; மீஞ்சூரில்...