×
Saravana Stores

அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய தேர்வு குழுக்கள் அமைக்க வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய தேர்வு குழுக்கள் அமைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு, பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடு மற்றும் அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்தும் தலைமை ஆசிரியர்களுக்கு ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படும். இந்த விருது பெறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும், பள்ளிக்கு ரூ.10 லட்சம் ஊக்க நிதியும் வழங்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டு, 100 பள்ளிகளுக்கான ஊக்க நிதி, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகிய செலவினங்களுக்காக ரூ.10.03 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய மாநில, மாவட்ட அளவில் தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த விருதுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி மாவட்ட அளவிலான தேர்வுக்குழு பள்ளிகளின் ஆய்வு செய்து பரிந்துரைகளை மாநிலக் குழுவுக்கு ஜனவரி 20ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

இந்த விருதுக்கு எக்காரணம் கொண்டும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளவர்கள், தண்டனை பெற்றவர்கள், குற்றவழக்கில் தொடர்புடையவர்களை பரிந்துரைக்கக்கூடாது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 50, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 50 என மொத்தம் 100 தலைமை ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. மாவட்ட விருது குழுவினர் பல்வேறு செயல்பாடுகளுக்கு மொத்தம் 500 மதிப்பெண்களை நிர்ணயம் செய்து அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சிறந்த தலைமை ஆசிரியர்கள் பட்டியலை தயார் செய்யவுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய தேர்வு குழுக்கள் அமைக்க வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,School Education Department ,Education ,the School ,Enlightenment ,Dinakaran ,
× RELATED வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட...