×

ஷார்ஜாவில் யுஏஇ அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி: குர்பாஸின் அதிரடி சதத்தால் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

ஷார்ஜா : ஐக்கிய அரபு அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக அடித்த சதத்தால் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, அங்கே டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர் ஹஸ்மத்துல்லா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ், அடுத்து வந்த இப்ராகிம் சத்ரானுடன் இணைந்து அதிரடியில் இறங்கினார்.

முதலில் நிதானமாக ரன் சேர்த்த இந்த ஜோடி குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களின் பந்துகளை பதம் பார்த்தனர். பவுண்டரிகளை விளாசி ரன் ரேட்டை எகிற வைத்தனர். சத்ரான் 43 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். ஆனால், குர்பாஸ் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து மிரட்டினார். அவர் 50 பந்துகளில் 100 ரன்களை கடந்து சதம் அடித்தார். அதில் 7 பவுண்டரி, 7 சிக்சர்களும் அடங்கும். அதன் பின் 52 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த நிலையில் 17வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இவரது அதிரடியால் ஐக்கிய அரபு அமீரகம் அணி கதிகலங்கிப் போனது. இதில் வேடிக்கை என்னவென்றால், குர்பாஸ் ஆட்டமிழந்த பின் களமிறங்கிய அஸ்மத்துல்லா ஓமர்சாய் 8 பந்துகளில் 19 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்களை எட்ட வைத்தார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

The post ஷார்ஜாவில் யுஏஇ அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி: குர்பாஸின் அதிரடி சதத்தால் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : 1st T20I ,UAE ,Sharjah ,Gurfaz ,Afghanistan ,Rahmanullah Gurbaz ,T20 ,United ,Arab Emirates ,United Arab Emirates ,Dinakaran ,
× RELATED ஐக்கிய அரபு நாடுகளில் கனமழை 10 விமான சேவை ரத்து பயணிகள் அவதி