×

கருணை அடிப்படையில் வேலை பெற தேவஸ்தான ஊழியரை அடித்துக்கொன்ற மனைவி, மகள்களுக்கு 13 ஆண்டு சிறை

திருமலை: கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்காக திருப்பதி தேவஸ்தான ஊழியரை அடித்துக்கொன்ற மனைவி, 2 மகள்களுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.திருப்பதியை சேர்ந்தவர் மனோகர். இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி வேமுரிசாரதா. இவர்களது மகள்கள் வேமுரி பவானி, வேமுரி சரிதா.

மனோகர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டிற்கு சரியாக பணம் தராமல் இருந்துள்ளார். மேலும் குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார். இதனால் கணவரால் எவ்வித நன்மையும் இல்லை எனக்கருதி சாரதா விரக்தியடைந்தார். அவர், இறந்துவிட்டால் மகள்களுக்கு கருணை அடிப்படையில் தேவஸ்தானத்தில் வேலை கிடைக்கும் எனக்கருதிய சாரதா, அவரை கொலை செய்யவும், அதனை இயற்கை மரணம் எனக்கூறி அனைவரையும் நம்ப வைக்கவும் திட்டமிட்டார். இதனால் மகள்களிடம் சம்மதம் தெரிவித்தபோது அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி வழக்கம்போல் மதுகுடித்துவிட்டு வந்த மனோகரை மகள்களுடன் சேர்ந்து குக்கரால் அடித்து கொலை செய்தனர். பின்னர் குடிபோதையில் தரையில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக அக்கம் பக்கத்தினர், உறவினர்களிடம் கூறி நம்ப வைத்தனர். ஆனால், மனோகரின் தலையில் காயத்தை கண்ட அவரது தந்தை மார்கண்டேயு, அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்காக, கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பதி 3வது கூடுதல் நீதிபதி முன்னிலையில் நடந்தது.

இதில் 3 பேரும் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், மனோகரை கொலை செய்த சாரதா, அவரது மகள்களுக்கு 13 ஆண்டு சிறையும், ரூ1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

The post கருணை அடிப்படையில் வேலை பெற தேவஸ்தான ஊழியரை அடித்துக்கொன்ற மனைவி, மகள்களுக்கு 13 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Tirupati Devasthanam ,Manohar ,Tirupati ,Tirumala Tirupati ,Devasthanam ,Vemurisaratha ,
× RELATED கோவிந்த நாமாவளி 10 லட்சத்து 1,116 முறை...