×

இந்த வார விசேஷங்கள்

சங்கடஹர சதுர்த்தி
30.12.2023 – சனிக்கிழமை

விக்கினங்களை நீக்கும் ஸ்ரீவிநாயக மூர்த்தியை வழிபட எத்தனையோ வழிபாடுகள் இருந்த போதிலும், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிகமிக முக்கியமானது. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது, கிருஷ்ண பட்சத்தில் வரும் சதுர்த்தி ஆகும். நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சந்திர பகவான்.

சந்திரனால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கவும், கேது தோஷம் போகவும் விநாயகரை வழிபடலாம். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீவிநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அது போல் நமக்கும் நல்லறிவு (மதி)வளர சதுர்த்தி பூஜை நல்லது.

எந்தச் செயலைச் செய்தாலும் அதில் சில இடர்பாடுகள் வருவதுண்டு. நம்மால் நீக்கிக் கொள்ள முடிந்த இடர்பாடுகள், நம்மால் நீக்கிக் கொள்ள முடியாத இடர்பாடுகள் என்று இரண்டு வகைப்படும். நம்மால் நீக்கிக் கொள்ள முடியாத இடர்பாடுகளை (சங்கடங்களை) நீக்குவதற்கு சதுர்த்தி விரதம் இருக்க வேண்டும். அன்று வேழ முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருடைய ஆலயத்திற்குச் சென்று, அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு வழிபட்டால் எந்த விக்கினங்களும் இன்றி நிறைவேறும்.

ஸ்ரீரங்கத்தில் திருவேடுபறி
30.12.2023 – சனிக்கிழமை

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் இராப்பத்து விழாவின் 8-ஆம் நாளான்று (இன்று) வேடுபறி வைபவம் கோயிலின் நான்காம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் மிக விமர்சையாக நடைபெறும். பரமபதவாசல் திறப்பு கிடையாது. வேடுபறி நிகழ்ச்சியையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளுவார். அப்போது மணல்வெளியில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு பக்திப்பரவசத்துடன் சேவிப்பார்கள். அதி அற்புதமான உற்சவம் இது.

திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை எல்லாம் இழந்த திருமங்கை மன்னன் தனது பெருமாள் கைங்கர்யம் தொடர வேண்டும் என்பதற்காக வழிப் பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தார். அவரை தடுத்து ஆட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிது நேரம் போக்கு காட்டி பின் அவரது வலது காதில் திரு மந்திரம் உபதேசித்து ஆட்கொண்டார். அதுவே இந்த வேடுபறி திருவிழாவின் தத்துவம்.

ஸ்ரீரங்கத்தில் தீர்த்தவாரி
1.1.2024 – திங்கட்கிழமை

மார்கழி உற்சவத்தின் இராப்பத்து 10-ம் நாளான இன்று நம்பெருமாள் கோயிலில் உள்ள சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறும். நம்பெருமாள் நேற்று இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

சஷ்டி விரதம்
2.1.2024 – செவ்வாய்க்கிழமை

மங்கள வாரமான சனிக்கிழமையில் முருகனுக்குரிய சஷ்டி விரதம், மகாலட்சுமிக்குரிய பூரம் நட்சத்திரத்தில் வருவது விசேஷமானது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல் நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு.

காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின்போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். இந்த விரதத்தின் மூலமாக வீடு வாகன யோகங்களை பெறலாம். திருமணத் தடைகள் நீங்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். முருகனை நினைத்து உபவாசமிருந்து மாலை அருகிலுள்ள முருகன் ஆலயத்திற்குச் சென்று வணங்குங்கள். கீழ்க்கண்ட கந்தர், கந்தர் அலங்காரப் பாடலை பாராயணம் செய்யவும்.

`சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும்
சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே’.

நம்மாழ்வார் மோட்சம்
2.1.2024 – செவ்வாய்க்கிழமை

திருவாய்மொழியின் கடைசி பதிகத்தில், நம்மாழ்வார் மோட்சத்துக்கு செல்லும் வழியையும், அங்கே தமக்குக் கிடைத்த வரவேற்பையும் பாடியிருக்கிறார். இந்த உற்சவத்தை நம்மாழ்வார் மோட்ச உற்சவம் என்பார்கள். அன்று பெருமாள் வழக்கம்போல் புறப்பட்டு வந்து சந்திர புஷ்கரணியில் தீர்த்தம் சாதித்து, தீர்த்தவாரி நடத்தி, திருமாமணி மண்டபம் சேர்வார். பிறகு திருமஞ்சனம் கண்டருள்வார். அன்று அவருக்கு பன்னீராயிரம் திருப்பணி யாரங்கள் சமர்ப்பிக்கப்படும்.

நம்மாழ்வார் பரமபதம் செல்லும் ஒரு முக்தன் வேடத்தில் இருப்பார். கிரீடம் முதலான திருவாபரணங்கள் இல்லாமல், பட்டு பீதாம்பரம் இல்லாமல், வெள்ளை உடுத்தி, பன்னிரு திருநாமம் சாற்றி, துளசி மாலையும் தரித்து, சேவை சாதிப்பார். இரண்டு அர்ச்சகர்கள், தங்கள் சரீரத்தைப் போர்வையால் போர்த்திக் கொண்டு ஆழ்வாரை திருக் கரங்களில் எழுந்தருளப் பண்ணிக் கொள்வார்கள். சத்ர சாமரங்கள் அவருக்குப் பிடிக்கப்படும். மோட்சத்துக்கு செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தை (ஒளி வழியை) விவரிக்கும், “சூழ் விசும்பு’’ என்ற ஒன்பதாம் திருவாய்மொழி சேவிக்கப்படும். நம்மாழ்வார் திருமேனியை எடுத்துச் சென்று பெருமாளின் திருவடியில் வைப்பார்கள்.

அங்கே, திருவாய் மொழியின் கடைசி பதிகமான ‘‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா’’ என்ற பதிகம் பாடப்படும். ஆழ்வாரின் மீது திருத்துழாய் (துளசி) வைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆழ்வாரை துளசியால் மூடிவிடுவார்கள். இந்தப் பதிகம் பூர்த்தியானவுடன், பெருமாள் ஆழ்வாருக்கு தம்முடைய கஸ்தூரி திருமண்காப்பையும் மாலையையும் அருளுவார். அதற்கு பிறகு, ‘‘எங்களுக்கு ஆழ்வாரை கொடுத்தருள வேண்டும்’’ என்று பிரார்த்தனை செய்ய, மூடியிருந்த துளசியை நீக்கிவிட்டு, மறுபடியும் ஆழ்வாரை யதாஸ்தானம் செய்ய, கைகளில் ஏந்திக் கொள்வார்கள். மதுரகவிகளின் கண்ணி நுண்சிறுத்தாம்பு என்கின்ற பாசுரம் சேவையாகும்.

பெருமாள் திருமாமணி மண்டபத்தில் இருந்து சன்னதிக்குப் புறப்படும்போது பனிக்காக போர்வை சாத்திக்கொண்டு விலாமிச்சை வேர் சப்பரத்தில் எழுந் தருளுவார். மல்லாரி என்கின்ற ராகம் வாசிக்கப்படும். ஒய்யார நடைபோடுவார். அப்பொழுது பலவிதமான வாத்தியங்கள் இசைக்கப்படும். கடைசியாக வாசிக்கப்படுவது வீணை. இந்த வாத்தியத்துடன் நாழி கேட்டான் வாசலில் இருந்து படியேற்றம் ஆகி சந்நதிக்குச் செல்வார்.

இயற்பகை நாயனார் குருபூஜை
3.1.2024 – புதன்கிழமை

அறுபத்தி மூன்று நாயன்மார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முறையில் சிவத்தொண்டு புரிந்து, எல்லையற்ற பக்தியால், சிவ பரம் பொருளை வணங்கி, அவருடைய பேரருள் பெற்றவர்கள். சிவனுடைய அடியார்கள் கோடிக்கணக்கில் உண்டு. ஆனால், ஏன் 63 அடியார்களை மட்டும் தொகையடியார்கள், நாயன்மார்கள் என்று பட்டம் சூட்டி அவர்கள் குருபூஜையை சிறப்பாகக் கொண்டாடுகிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் சாதாரண மனிதர் களால் செய்ய முடியாத அரும்பெரும் செயலை, பக்தியின் எல்லை நிலத்தில் நின்று, செய்தது நமக்குப் புலப்படும்.

நம்முடைய கற்பனைக்கும் அப்பாற்பட்ட இந்த அரும் செயல்களைச் செய்ததால் அவர்கள் சிவனருட் செல்வர்களாக விளங்குகின்றார்கள். அந்த சிவனருட் செல்வர்களுடைய குருபூஜையை நடத்துவதன் மூலமும், கலந்து கொள்வதன் மூலமும் எல்லையற்ற நலன்களைப் பெறலாம். பூம்புகார் ஒரு காலத்தில் மிகப்பெரிய துறைமுகம். சோழநாட்டின் தலை நகர். பூம்புகாரில் மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் இயற்பகை நாயனார். பொதுவான இயற்கைக் குணத்திற்கு எதிர் குணம் கொண்டவர் என்பதால் இவருக்கு இயற்பகை நாயனார் என்ற பட்டப்பெயர்.

சிவனடியார்க்கு அடிமை என்ற நிலையில் சிவத்தொண்டுபுரிவதையே தம் முடைய வாழ்வின் நோக்கமாக கொண்டதாலும், அதை இயல்பாகவே செய்யும் தன்மை கொண்டிருந்ததாலும் இவருக்கு இயற்பகை நாயனார் என்று பெயர். இந்த காரணப் பெயருக்கு ஏற்ற சம்பவம் ஒன்று அவருடைய வாழ்க்கையில் நடைபெற்றது. அது சாதாரண மனிதர்கள் வாழ்வில் நடக்கக்கூடாத ஒரு பயங்கரம். ஆனால், ஆத்ம சுத்தம் மிகுந்தவர்கள் பக்தியில்சிறந்தவர்கள் இதை வேறொரு எல்லையிலிருந்துதான் பார்ப்பார்களே தவிர உலக வழக்குகளில் அகப்பட்டு விமர்சிக்க மாட்டார்கள். அப்படி என்ன இந்த இயற்பகை நாயனார் செய்து
விட்டார் என்று நீங்கள் நினைக்கலாம்.

சிவனடியார்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளலான இவரிடம், ஒரு சிவனடியார் வந்து, இவருடைய மனைவியைத் தானம் கேட்டார். இவர் மனைவியின் முகத்தைப் பார்த்தார். இது சிவச்சோதனை என்று சிந்தை சொல்ல தெளிவடைந்தார். இறைவன் எந்த நிலையிலும் கைவிட மாட்டான் என்கின்ற ஆத்மசுத்தி இருப்பவர்களுக்கு உலக விமர்சனங்கள் தடையாக இருக்காது. அவருடைய மனைவி தயக்கமின்றி சொன்னாள். ‘‘அடியார்களுக்கு எம்மை விற்கவும் தகுமே என்று சொல்வார்கள். ஒரு அடியாரோடு அவருக்கு பணிவிடை செய்ய நான் செல்வதாக இருந்தால் மகிழ்ச்சிதான்’’ என்று தெரிவித்தார்.

இதனை உலகம் ஏற்குமா? உறவினர்கள் ஏற்பார்களா? கடும் போர் மூண்டது. தன்னுடைய வாள் வலியாலும் தோள் வலியாலும் உறவினர்களையும் எதிர்த்தார். இயற்பகை நாயனார் பூம்பு காரிலிருந்து சிவனடியாரோடு தன் மனைவியை பாதுகாப்பாக அனுப்பிவைத்தார். இயற்கைக்கு மாறுபட்ட செயலையும் செய்யத் துணிந்தவர் என்பதனால் அவருக்கு இயற்பகை நாயனார் என்று பெயர்.

அதனால்தான் சுந்தரர், திருத்தொண்டத்தொகையில், ‘‘இல்லையே என்னாத இயற்பகை நாயனாருக்கு அடியேன்’’ என்று உள்ளம் உருகிப் பாடுகின்றார். தனக்காக இவ்வளவையும் செய்தார் என்று உளம் பூரித்த சிவபெருமான் அந்த இடத்திலே ரிஷப வாகனத்தில் ஏறி அருட்காட்சி தந்தார். ‘‘என்னே, உன்னுடைய பக்தி! உன்னுடைய பிரேமம்! எந்தவித சஞ்சலமும் இல்லாது ஒரு செயலைச் செய்வது என்பது சாதாரண மனித ஆற்றலுக்கும் மனித எண்ணத்திற்கும் அப்பாற்பட்டது.

அதை நீ செய்தாய். நீ புனிதன்! அசல் சிவன் அடியார்! நீவீர் இருவரும் வாழ்வாங்கு வாழ்ந்து, வற்றாத வளம் பெற்று, சிவபதம் அடைவீர்’’ என்று அருளி மறைந்தார். அவருடைய குரு பூஜை தினம் இன்று. இப்படி பகையை வென்று, தன் மனைவியோடு சிவனடியாரை கொண்டு போய் விட்ட இடம் திருச்சாய்க்காடு. இப்பொழுதும் பூம்புகாருக்கு அருகில் இத்தலம் இருக்கிறது. சாயாவனம் என்றும் பெயர். இறைவன் திருநாமம் சாயாவனேஸ்வரர். அப்பர், சம்பந்தர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி வடகரை சிவத்தலமாகும்.

இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திர லோகம் இழுத்து செல்ல முயற்சித்தான்.

கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். அம்மனுக்கு ‘‘குயிலினும் இனிமொழியம்மை’’ என்ற திருநாமம். உடனே சிவன் தோன்றி, “இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக,’’ என
அருள்புரிந்தார்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Sangadahara Chaturthi ,Sangadahara ,Srivinayaka Murthy ,Chaturthi ,Krishna ,
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா