×

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி: தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு..!!

தூத்துக்குடி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது. தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேறியது. காயல்பட்டினத்தில் 96 செ.மீ., ஸ்ரீவைகுண்டத்தில் 69 செ.மீ. மழை பெய்ததால் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைந்தது. இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நெல்லையின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் நிரம்பிய நிலையில் இந்த அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கனமழை பெய்யும் பட்சத்தில் நீர்திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடிக்கு இன்றும் நாளையும் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தினர் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். வெள்ளம் அபாயம் குறித்து வருவாய்த் துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம், ஏரல் வட்டாட்சியர்கள் கரையோரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடிக்கு இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் காற்று சுழற்சி ஏற்பட்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி: தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Tamiraparani river ,Thoothukudi ,Tamirabarani ,Srivaikundam ,Dinakaran ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...