×

ஏமாந்த ஏஜெண்டுகள் தீக்குளிப்பு போராட்டம் அறிவித்ததால் போலீசார் குவிப்பு செய்யாறு அருகே பரபரப்பு தனியார் சீட்டு நிறுவனத்தில் பல கோடி மோசடி

செய்யாறு, டிச. 30: செய்யாறு அருகே தனியார் சீட்டு நிறுவனத்தில் பலகோடி மோசடி நடந்ததை தொடர்ந்து பணம் கட்டி ஏமாந்த ஏஜெண்டுகள் தீக்குளிப்பு போராட்டம் அறிவித்ததை தொடர்டந்து போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் புதிய காஞ்சிபுரம் சாலையில் ஏபிஆர் சிட் பண்ட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, மே 1 (தொழிலாளர் தினம்) ஆகிய பண்டிகைகள், சிறப்பு நாட்கள் முன்னிட்டு ₹100 முதல் 5000 வரையிலான சிட்பண்ட் நடத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் பட்டாசு இனிப்பு மளிகை பொருட்கள் பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க நாணயங்கள் என கட்டிய பணத்திற்கு 4 மடங்குகளாக பொருட்கள் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தமிழகம் முழுவதும் 48 கிளைகள் மூலம் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என சுமார் 5 லட்சம் பேர் மாதச் சீட்டு செலுத்தி வந்துள்ளனர். இதன் மூலம் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகையின் போது பொருட்கள் வழங்கவில்லை எனக்கூறி சிட்பண்ட் நிறுவனத்தை பொதுமக்கள் சூறையாடினர். தொடர்ந்து லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்ததாக பெண் ஏஜென்ட் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நிறுவன உரிமையாளர் அல்தாப்தாசிப்பை கடந்த மாதம் கைது செய்தனர்.

இந்நிலையில் தனியார் சிட் பண்ட் நிறுவன தலைமை அலுவலகத்தில் உள்ள மளிகை கடையில் கடந்த 17ஆம் தேதி மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மளிகை பொருட்களை அள்ளிச் சென்றனர். இந்நிலையில் மளிகை கடையில் ₹30,000 பொருட்கள் மளிகை பொருட்களை அள்ளிச் சென்றதாக இருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று செய்யாறு ஆற்றுபாலம் அருகே ஏபிஆர் சீட்டு நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கூடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக செய்யாறு டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரணையில் ஏபிஆர் சீட்டு நிறுவனத்தில் ஏஜென்டாக செயல்பட்டு வந்த சென்னையை சேர்ந்த பெண் வாட்ஸ்அப் இருந்து தகவல்கள் பரவியது தெரியவந்தது.

அதில் ஏஜென்ட்கள் அனைவரும் ஏபிஆர் நிறுவனர் அல்தாப்தாஷிப்பை நம்பி நாம் பணம் செலுத்தவில்லை. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர்களை நம்பிதான் பணம் செலுத்தினோம். அவர்கள் முறையாக பதில் அளிக்காமல் ஏமாற்றினர். எனவே ஏஜென்ட்களை கண்டித்து செய்யாறு ஆற்றுபாலம் அருகே கூடி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக குறிப்பிட்டிருந்தாராம். இதைத் தொடர்ந்து தான் செய்யாறு டிஎஸ்பி சின்னராஜ் தலைமையில் நேற்று காலை 8 மணி முதல் 11 மணி வரை செய்யாறு, வந்தவாசி, ஆரணி, ஆகிய பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டம் அறிவித்திருந்தபடி அங்கு யாரும் வரவில்லை.

The post ஏமாந்த ஏஜெண்டுகள் தீக்குளிப்பு போராட்டம் அறிவித்ததால் போலீசார் குவிப்பு செய்யாறு அருகே பரபரப்பு தனியார் சீட்டு நிறுவனத்தில் பல கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Do Not Do ,Tiruvannamalai District ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...