×

பேருந்து வசதி இல்லாததால் 6 கி.மீ நடந்து செல்லும் விச்சூர் பகுதி மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவொற்றியூர், டிச.30: மணலி புதுநகர் அருகே விச்சூர் மற்றும் வெள்ளிவாயல் பகுதிகள் உள்ளன. இதை சுற்றியுள்ள 15 கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் மாநகர பேருந்து வசதியில்லை. இதனால், இந்த பகுதியை சேர்ந்த தொழிலாளிகள், மாணவ, மாணவியர், பெண்கள், தினக்கூலிகள் என அனைவரும் விச்சூரிலிருந்து சென்னைக்கு செல்ல, 6 கி.மீ நடந்து சென்று, மணலி புதுநகரில் இருந்து மாநகர பேருந்தில் பயணிக்கும் நிலை உள்ளது. அதேபோல், சோழவரம் செல்ல 9 கி.மீ நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, விச்சூர் பகுதிக்கு மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், வேலைக்கு செல்பவர்கள், மாணவ, மாணவியர் தினசரி சிரமத்துடன் செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி, இளம்பெண்கள், மாணவ, மாணவிகள், பொன்னேரி நெடுஞ்சாலையில் இறங்கி, விச்சூர் அல்லது வெள்ளிவாயல் பகுதிக்கு நடந்து செல்லும்போது, வழிப்பறி உள்ளிட்ட பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிவாயல் ஊராட்சி திமுக கவுன்சிலர் ஷகிலா சகாதேவன் இந்த பகுதிக்கு மாநகர பேருந்து இயக்க வேண்டும், என்று கோரிக்கை மனுவை போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மாநகர போக்குவரத்து தலைமை அதிகாரிகளுக்கு கொடுத்து இருந்தார். அதன் அடிப்படையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோழவரத்தில் இருந்து வெள்ளிவாயல், விச்சூர் வழியாக பொன்னேரி நெடுஞ்சாலைக்கு வந்து சென்னைக்கு மாநகர பேருந்து இயக்க திட்டமிட்டு, இதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஒத்திகைக்கு பின் இந்த வழித்தடத்தில் இதுவரை மாநகர பேருந்து இயக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, திட்டமிட்டபடி இந்த வழித்தடத்தில் மாநகர பேருந்து இயக்க வேண்டும்ல என்று அப்பகுதி மக்கள், மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பேருந்து வசதி இல்லாததால் 6 கி.மீ நடந்து செல்லும் விச்சூர் பகுதி மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vichure ,Thiruvottiyur ,Vichur ,Vellivayal ,Manali Pudunagar ,Vichoor ,Dinakaran ,
× RELATED பைக் மீது லாரி மோதியதில் மாநகராட்சி...