×

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட மேலும் ஒரு மாகாணத்தில் தடை: உச்சநீதிமன்றத்தின் கையில் முடிவு?

போர்ட்லேண்ட்: அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட குடியரசு கட்சியின் தலைவரும் அப்போதைய அதிபருமான டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால், அவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி அவரது ஆதரவாளர்களை போரட்டத்தில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார். இதையடுத்து, டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த 2021 ஜனவரி 6ம் தேதி நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடோல் கட்டிடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.

இதில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, டிரம்ப் மீது பல்வேறு மாகாணங்கள், கவுன்டிகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, கொலராடோ மாகாண நீதிமன்றம் கடந்த 20ம் தேதி டிரம்பை அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், கொலராடோவைத் தொடர்ந்து, மைனே மாகாணத்திலும் டிரம்ப் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனநாயக கட்சியை சேர்ந்த மைனே மாகாணத்தின் வெளியுறவு அமைச்சர் ஷென்னா பெல்லோஸ் கூறுகையில், “டிரம்பின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்ற வன்முறைகள் நடந்துள்ளன. அமெரிக்க அரசியலமைப்பு மீதான தாக்குதலை அரசு பொறுத்து கொள்ளாது,” என்று தெரிவித்தார். இந்த முடிவை எதிர்த்து டிரம்ப் தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளனர். இதனால், டிரம்ப் அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது தற்போது அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் கையில் உள்ளது.

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட மேலும் ஒரு மாகாணத்தில் தடை: உச்சநீதிமன்றத்தின் கையில் முடிவு? appeared first on Dinakaran.

Tags : Trump ,US presidential election ,Supreme Court ,Portland ,Donald Trump ,Republican Party ,2020 presidential election ,United States ,Dinakaran ,
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்