×

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மகரவிளக்கு கால பூஜைகள் நாளை (31ம் தேதி) முதல் தொடங்குகின்றன. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. கடந்த 27ம் தேதி நடைபெற்ற மண்டல பூஜையுடன் 41 நாள் நீண்ட இவ்வருட மண்டல காலம் நிறைவடைந்தது. அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.

2 நாள் இடைவெளிக்குப் பின்னர் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறப்பார். தொடர்ந்து பக்தர்கள் நெய் தேங்காய் எரிக்கும் 18ம்படிக்கு முன் உள்ள ஆழியில் மேல்சாந்தி தீ மூட்டுவார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் நடை சாத்தப்படும். நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை, நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும்.

ஜனவரி 15ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. இன்று நடை திறப்பை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்களுக்காக கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு போலீஸ் அதிகாரியாக தமிழர் நியமனம்: சன்னிதானம் சிறப்பு எஸ்.பியாக திண்டுக்கலை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியும், பாலக்காடு எஸ்.பியுமான ஆனந்த் நேற்று பொறுப்பேற்றார். இவரது தலைமையில் சன்னிதானத்தில் மட்டும் 11 டிஎஸ்பிக்கள், 33 இன்ஸ்பெக்டர்கள் 96 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 1474 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் தவிர வெடிகுண்டு பிரிவு போலீசார், அதிரடிப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

The post மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Ayyappan temple ,Makaravilakku ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan Temple ,
× RELATED சபரிமலையில் நெரிசலை குறைக்க உடனடி முன்பதிவு ரத்து