×

2வது டெஸ்டிலும் வீழ்ந்தது பாகிஸ்தான் தொடரை வென்றது ஆஸ்திரேலியா


மெல்போர்ன்: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில் 79 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடந்த இப்போட்டியில் (பாக்சிங் டே டெஸ்ட்), டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச… ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 318 ரன் குவித்தது. லாபுஷேன் 63, கவாஜா 42, மிட்செல் மார்ஷ் 41, வார்னர் 38, ஸ்மித் 26 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 264 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அப்துல்லா 62, கேப்டன் ஷான் மசூத் 54, ரிஸ்வான் 42, ஷாகீன் அப்ரிடி 21 ரன் எடுத்தனர்.

அமெர் ஜமால் 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் கேப்டன் கம்மின்ஸ் 5, லயன் 4, ஹேசல்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். 54 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸி. 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்திருந்தது. 4ம் நாளான நேற்று அந்த அணி 262 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. மிட்செல் மார்ஷ் 96, அலெக்ஸ் கேரி 53, ஸ்மித் 50 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். பாக். தரப்பில் அப்ரிடி, மிர் ஹம்சா தலா 4, ஜமால் 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, 317 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாக். 67.2 ஓவரில் 237 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஷான் 60, ஆஹா சல்மான் 50, பாபர் 41, ரிஸ்வான் 35, ஷகீல் 24 ரன் எடுத்தனர். ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ் 5, ஸ்டார்க் 4, ஹேசல்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். 2 இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்திய கம்மின்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸி. 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், கடைசி டெஸ்ட் சிட்னியில் ஜன.3ம் தேதி தொடங்குகிறது.

The post 2வது டெஸ்டிலும் வீழ்ந்தது பாகிஸ்தான் தொடரை வென்றது ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.

Tags : Australia ,Pakistan ,Melbourne ,Day ,Melbourne Cricket Stadium ,
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!