×

ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம் அமலாக்கத்துறை அதிகாரிக்கு மதுரை போலீஸ் பதில் கடிதம்: நேரில் சென்று வழங்கினர்

மதுரை: அமலாக்கத்துறை அதிகாரி மீதான லஞ்ச வழக்கில் விசாரணைக்கு 3முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல், சம்மனில் விபரங்கள் இல்லையென வழக்கை இழுத்தடிக்கும் வகையில் வழங்கிய கடிதத்திற்கு, விளக்கமான பதில் கடிதத்தை மதுரை தல்லாகுளம் போலீசார் அனுப்பி வைத்தனர். திண்டுக்கல அரசு டாக்டரிம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அறையில் சோதனை நடந்த முயன்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரை தடுத்ததாக மதுரை அமலாக்கத்துறை அலுவலக உதவி இயக்குனர் உட்பட அப்போது பணியில் இருந்தவர்கள் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

இதேபோல், லஞ்ச ஒழிப்பு போலீசார் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விளக்கமளிக்க அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ்ட் பெனிவாலுக்கு விளக்கம்கோரி நேரில் ஒருமுறை, பதிவுத் தபாலில் இருமுறை என போலீசார் சம்மன் வழங்கி அழைத்திருந்தும் அவர் ஆஜராகவில்லை. ஆனால், அமலாக்கத்துறையின் மற்றொரு உதவி இயக்குநர் அதுல் குப்தா, தல்லாகுளம் உதவி கமிஷனர் சம்பத்திற்கு கடிதம் அனுப்பி, ‘‘போலீசார் அனுப்பிய சம்மனில் முறையான விபரங்கள் இல்லை.

டிஜிபி, மதுரை போலீஸ் கமிஷனரின் கடிதங்களின் நகல்கள், விசாரணைக்கு ஆஜராக வேண்டியவர் யார், எந்த ஆவணங்கள் தேவை என்பதை வழங்கவேண்டும்’’ என்று கேட்டிருந்தார். உரிய விளக்கத்துடன், கால அவகாசமும் வழங்கி நேரில் சென்றும், பதிவுத் தபாலிலும் சம்மன் வழங்கியும், ஆஜராகாமல் இழுத்தடிக்கும் முயற்சியாகவே இந்த பதில் கடிதம் அமைந்திருப்பதாக போலீசார் கருதுகின்றனர். இருப்பினும், மதுரை தல்லாகுளம் போலீசார் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு விளக்கமான பதில் கடிதம் தயாரித்தனர். சீலிடப்பட்ட இந்த கடிதத்தை மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினர்.

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தவரான அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ்ட் பெனிவால் ஆஜராகி விளக்கமளிப்பது அவசியம் எனவும், புகார் தரப்பட்டதற்கான உரிய ஆவணங்கள் கொண்டு வர வேண்டும், தேவை கருதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் புகார் குறித்த தகவலும் கேட்கலாம் எனவும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரி ஆஜராகி விளக்கமளிக்கும்போது, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த சோதனையுடன், அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற சம்பவத்தில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பது, உயரதிகாரிகள் தொடர்புகள் உள்ளிட்டவைகள் குறித்தும் விபரம் கேட்கலாம் எனத்தெரிகிறது.

The post ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம் அமலாக்கத்துறை அதிகாரிக்கு மதுரை போலீஸ் பதில் கடிதம்: நேரில் சென்று வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Thallakulam police ,Dindigal ,Madurai Police ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை