×

குழந்தைகளிடம் கதை கேட்கலாம் வாங்க!

நன்றி குங்குமம் தோழி

‘எந்த ஊரையும் பட்டிக்காட்டான் பட்டணத்தை பார்க்க கற்றுக்கொள்’ என்று சொல்வார்கள். அதன் பொருள் எந்த வயதிலும் நமக்குள் இருக்கும் குழந்தைமையை தக்க வைத்துக்கொள் என்பதுதான். வயது அதிகமாகும் போது நமக்குள் இருக்கும் குழந்தைத்தன்மையை நாம் படிப்படியாக மறந்து விடுகிறோம். குழந்தைகளின் உலகமே தனி. குறிப்பாக அவர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட கதைக்களம் இருக்கும். அந்த கதை அவர்களுக்குதான் புரியும். அது நமக்கும் புரிந்தால்தான், நம்மால் அவர்களுடன் பழக முடியும்.

அதற்கு, நாமும் அவர்களைப் போலவே குழந்தைகளாகவே மாற வேண்டும். அப்படிப்பட்ட குழந்தைகளின் கதைகளை ஆவணப்படுத்தி வருகின்றனர் ‘களிமண்’, கலை அமைப்பினை சேர்ந்த குமார் மற்றும் பெட்ரீசியா. இவர்கள் இருவரும் தமிழ்நாடு முழுக்க பயணம் செய்து குழந்தைகளிடம் கதைகளை கேட்டு அதை கலைப் பொருட்களாக மாற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘‘என் சொந்த ஊரு வில்லிபுத்தூர். நான் வளர்ந்தது எல்லாமே ஹாஸ்டலில் தான்’’ என்று பேசத்துவங்கினார் குமார். ‘‘பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிக்கும் போது ‘அறம்’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை ஒன்றை தொடங்கினேன். அதில் என்னால் முடிந்த உதவியினை சிறிய அளவில் செய்து வந்தேன். ஆனால் கல்லூரியின் மேற்படிப்பிற்காக சென்னை வந்ததால், என்னால் அந்த அறக்கட்டளையினை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. பட்டப்படிப்பு முடிந்த பிறகு நண்பர்களுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதுதான் களிமண். கதை சொல்லும் நிகழ்வுகளுக்காகத் தான் நாங்க இதை தொடங்கினோம்.

அதில் ஒரு பகுதியாக குழந்தைகளிடம் கதை கேட்டு வந்தோம். நாம் சிறு வயதில் இருந்து நம்முடைய வாழ்க்கையில் பார்த்தவற்றை எல்லாம் கதைகளாக சொல்வோம். ஆனால் அதை காது கொடுத்து யாரும் கேட்கமாட்டார்கள். அதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த களிமண் ஆர்ட் பயிற்சி. நான் இதற்கு முன் இந்தியா முழுவதுமான ஒரு பயணத்தை தொடங்கினேன். அதில் பல மாநிலங்கள் செல்லும் போது அங்குள்ள குழந்தைகளிடம் கதைகளை கேட்பேன். மேலும் அவர்களுக்கு கலைப் பொருட்களான பொம்மைகள் செய்ய சொல்லி கொடுப்பது, படங்கள் வரைய வைப்பது என அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக கலை சார்ந்த வேலைகளை செய்து வந்தேன்’’ என்றவர் குழந்தைகளின் கதைகளை பற்றி சொல்லத் தொடங்கினார்.

‘‘நான் மாநிலங்களுக்கு தனியாகத்தான் பயணம் செய்தேன். அப்போது எனக்கு தெரிந்த நண்பர்களின் நண்பர்கள் ஒவ்வொரு ஊரிலும் உள்ள குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்தார்கள். ஒரு ஊரின் ஒரு பகுதியில் உள்ள குழந்தைகளை எல்லாம் ஒன்றாக திரட்டி அவர்களுக்கு கதைகளை சொல்வேன். சில மாநிலங்களில் ஹிந்தி மொழிதான் பெரும்பான்மையாக இருக்கும். அதனால் நான் ஆங்கிலத்தில் கதையினை சொல்வேன். என் நண்பர்கள் அதனை குழந்தைகளுக்கு புரியும் மொழியில் மொழிப்பெயர்த்து சொல்வார்கள். மறுநாள் குழந்தைகளிடம் கதை சொல்லுமாறு கேட்பேன். ஒவ்வொரு குழந்தையின் கதையும் எந்த ஒரு அதிகார தன்மையும் இல்லாமல் யார் மீதும் குற்றம் சுமத்தாமல் இருக்கும்.

சில குழந்தைகள் அவர்கள் பார்த்த விலங்குகளை மையப்படுத்தி கதை சொல்லுவார்கள். ஒரு முறை நான் அசாம், காசிரங்கா பகுதிக்கு சென்றிருந்த போது அங்குள்ள குழந்தைகள் காண்டாமிருகங்களை வைத்து கதை சொன்னார்கள். அதுவே மற்ற மாநகரங்களில் உள்ள குழந்தைகளின் கதைகள் வேறு மாதிரியாக இருக்கும். இதன் மூலம் அவர்கள் தங்களுடைய திறமைகள் மீது கவனம் செலுத்த தொடங்குகிறார்கள்’’ என்றவர் குழந்தையிடம் கதை கேட்பதற்காக சென்னையிலிருந்து மதுரை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் இவருடன் களிமண் ஆர்ட் வொர்க்‌ஷாப்பில் இருக்கும் ஒருவரான பெட்ரீசியாவும் இவருடன் சென்றுள்ளார். அப்படித்தான் பெட்ரீசியா இதில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

‘‘நானும் குமாரும், மதுரைக்கு சைக்கிளில் செல்லும் வழியில் இருக்கும் குழந்தைகளிடம் கதை கேட்டு அவர்களிடம் அந்த கலை சம்பந்தமான வேலைகள் செய்வது என முடிவெடுத்து தான் இந்த பயணத்திற்கு தயாரானோம்’’ என்றார் பெட்ரீசியா. ‘‘மதுரைக்கு செல்லும் வழியில் இருக்கும் நண்பர்களின் உதவியால் பல பள்ளிகள் மற்றும் ஊர்களுக்கும் சென்று குழந்தைகளுக்கு சில கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுக் கொடுத்தோம்.

நாங்க அவர்களுக்கு கற்றுக் ெகாடுக்க தான் சென்றோம். ஆனால் குழந்தைகளிடம் இருந்து நாங்க பல விஷயங்களை கற்றுக் கொண்டு வந்தோம். ஒவ்வொரு முறை குழந்தைகளிடம் பேசும் போதும் எங்களின் அகந்தை, நான் என்கிற கர்வம் உடைந்து குழந்தைதன்மை எங்களுக்குள் வந்திடும். மதுரைக்கு சென்ற போது, ஒரு கட்டத்தில் எங்களால் இந்த பயணத்தை மேற்கொண்டு தொடர முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

காரணம், என் காலில் அடிபட்டு ரத்தம் வந்தது. ஆனாலும் மனம் தளராமல் அடுத்தடுத்து குழந்தைகளை சந்திக்கும் போது தரும் உற்சாகம் என்னுடைய வலியை மறந்து ஒவ்வொரு ஊராக நகர்த்தியது. இப்படி மதுரையில் மட்டுமே நாங்க 40 நாட்கள் தங்கி அங்குள்ள குழந்தைகள் அனைவரையும் சந்தித்தோம். குழந்தைகளிடம் பேசுவதை விட அவர்கள் சொல்வதை கேட்டால் தான் நம்மால் அவர்களை புரிந்து கொள்ள முடியும்’’ என்றார் பெட்ரீசியா.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post குழந்தைகளிடம் கதை கேட்கலாம் வாங்க! appeared first on Dinakaran.

Tags : kumkum doshi ,Pattikkatan Pattanam ,Dinakaran ,
× RELATED கிச்சன் டிப்ஸ்