×

பாதுகையின் வருத்தம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மனிதர்களுக்குத் `தான்’ என்ற அகங்காரம் இருப்பது போல, தேவலோகத்தில், வைகுண்டத்தில், கைலாயத்தில் இருக்கும் ஆயுதங்களுக்கும் தான் என்ற கர்வமும் அகங்காரமும், ஆணவமும் இருக்கும் என்பதில் இந்த வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. வைகுண்டத்தில் திருமால் பரமபத நாதனாக பாம்பணையின் ஆதிசேஷன் மீது வீற்றிருக்கின்றார். திருமால் யார் யாருக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை ஆராய்ந்து செய்யக்கூடியவர்.

இதைத்தான் ஆண்டாள், `யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்’ என்கின்றாள். அதுபோல, யாருக்கு என்ன செய்ய வேண்டும், யாருக்கு என்ன இடையூறு ஏற்பட்டது, இடையூறு ஆகிய அந்த கர்மத்தை எப்படி கழிக்கலாம் என்பதெல்லாம் சிந்தித்துச் செயல்படக் கூடியவர்.

அவ்வாறே அன்றும் நடந்ததுதிருமால், தன்னுடைய பாதுகையை ஓர் அறையின் மூலையில் வைத்தார். அவர் வைத்துவிட்டு, பாம்பணையின் மீது படுத்தும் கொண்டார். மேலும், அவருடைய சங்கு, சக்கரம், கதை, வாள், அம்பு, தூரிகை ஆகியவைகளும் அந்த அறையில்தான் இருந்தன. ஒரு செருப்பு நமக்கு சமமாக இருப்பதை, திருமாலின் மற்ற ஆயுதங்கள் விரும்பவில்லை. அந்த ஆயுதங்கள் அனைத்தும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து சுளித்து, அருவருப்பாக திருமாலின் பாதுகையை நோக்கினர்.

அவர்களுடைய பார்வையில், கொதித்த நெருப்பின் சுவடைக் கண்டு, பாதுகை அலறியது. தன்னைவிட உயர்ந்த ஆயுதங்கள், தன்னைக் கேவலமாகப் பார்ப்பதை எண்ணி, கூனிக்குறுகியது. அவர்கள் காட்டும் அந்த அருவருப்பை நினைத்து நினைத்து, உடல் கூசி நடுநடுங்கி ஓரமாகக் கிடந்தது. “நம்பெருமாளுக்கு என்னவாயிற்று? எதைஎதை எங்கே வைக்க வேண்டும் என்பது கூட அவருக்குத்தெரியவில்லையே? நான் அவருடைய காதுக்கு அருகில் இடக்கைபக்கமாக இருக்கும் எனக்கு, இந்த அல்ப பாதுகை சமமாக வந்து நிற்கிறதே?’ என்று குரல் கொடுத்தது, சங்கு.

`ஆமா.. ஆமாம்.. என்ன செய்வது? நான் சுழன்றால், உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களையும், எதிரிகளையும் வீழ்த்தக்கூடிய எனக்குச் சமமாக இந்த பாதுகை இருக்கிறதே? என் எதிரே இருக்கவும் இதற்கு தகுதி உண்டோ?’ என்று சக்கரம், தன்னுடைய பங்கையும் ஊசிகளாகக் குத்தி பாதுகையை வருத்தப்படச் செய்தது.

பாதுகைக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்ணீர் பொலபொலவென வடிந்து ஓடியது.`பாருங்கள், நீங்கள் சொல்வதை போல் நானாக, தன்னிச்சையாக இங்கே வரவில்லை. திருமால்தான் என்னைக் கொண்டு வந்து இங்கே வைத்துவிட்டார். நான் என்ன செய்ய முடியும்?’ என அழுது கொண்டே பாதுகை கூறியது. `திருமால் வைத்தால் உனக்கு புத்தி இல்லையா? அவரவர்களுடைய இடம் எதுவோ, அங்குதானே இருக்க வேண்டும். அவர் வைத்தார் என்றால் நீயும் இங்கேயே தங்கிவிடுவாயோ?’ என்று அனைத்து ஆயுதங்களும் சேர்ந்து ஆவேசமாகப்
பேசின.

உள்ளத்தில் குத்திய குற்றப் பேச்சுக்களைத் தாங்க முடியாமல், அழுது கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறியது, பாதுகை. இதை எல்லாம் படுத்துக்கொண்டே, புன்சிரிப்போடு திருமால் பார்த்துக்கொண்டிருந்தார். நாட்கள் சென்றன. ஒரு நாள், தனிமையில் இருக்கும் பொழுது, திருமாலிடத்திலே பாதுகை அழுதது.

`என்னை அனைவரும் கேவலமாகப் பார்க்கிறார்கள். உங்களை மற்றவர்கள் அலங்கரிப்பது போல, பாதுகையாகிய நானும், அலங்கரிக்கின்றேன். அப்படி இருக்கும்போது, நான் மட்டும் ஏன் உங்களுடைய பெருமையில் சிறப்பு அடையவில்லை’ என்று கண்ணீர் சிந்தி அவருடைய பாதங்களில் தழுவியது. `எண் சாண் உடம்பிற்கு தலையே பிரதானம் என்றாலும், அந்த உடம்பைத் தாங்கி நிற்கக்கூடிய பாதங்களுக்கு (கால்கள்) மிகவும் முக்கியமானது பாதுகையல்லவா!

அதனோடு செல்லுகின்ற பொழுதுதான் நம்முடைய உடலுக்கும், பிரதான பாகமாக விளங்கக்கூடிய கண்ணுக்கும் மற்ற உறுப்புகளுக்கும் பாதுகாப்பு அளிக்கமுடியும். பாதத்தில் ஒரு சிறிய முள் குத்தினால்கூட கண்களிலே கண்ணீரும், காதுகள் அடைத்து, உதடு துடிக்க அழுகின்றோம். மற்ற அவயங்களும் வலி பொறுக்காமல் துடிக்கின்றன. அப்போது, நான் அனைவருக்கும் முக்கியமானவன்தானே? அப்படியிருக்க, என்னை இப்படி கேவலமாக இவர்கள் பேசுவது சகிக்க முடியவில்லை திருமாலே. நான் என்ன பாவம் செய்தேன் என்னை ஏன் இப்படி படைத்தாய்’ என்று திருமால் இடத்திலே வாதிட்டது.

`பாதுகையே…வருந்தாதே… உனக்கென்று ஒரு காலம் வரும். அப்பொழுது இந்த ஆயுதங்களைவிட நீ மேன்மையானவனாக திகழ்வாய். அதற்குரிய காலம் வரும்வரை, நீ.. காத்திருக்க வேண்டும்’ என திருமால், கூறினார். `என்னை ஆராதிக்க வேண்டும் என்பதெல்லாம் என் ஆசை இல்லை. என்னை கேவல மாக பார்க்காமல் இருந்தாலே போதும். தங்களுடைய திருவடியை நான் தழுவுகின்ற பொழுது, என்னுடைய மேனி சிலிர்க்கின்றது. நான் பிறந்ததின் பெருமையையும் அடைகின்றேன்.’ என்று திருமாலின் திருவடியில் சரண் அடைந்தது.

காலம் ஓடியது. திருமால், ராமபிரானாக அவதாரம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தசரதன் மனைவி , கைகேயியின் விருப்பத்திற்கு ஏற்ப, ராமபிரான் சீதையோடும், லட்சுமணனுடனும் வனவாசம் செல்கின்றார். தன் பாட்டனார் வீட்டில் இருந்த பரதனுக்கு, அண்ணன் வனவாசம் சென்றது எதுவுமே தெரியாது. தந்தையின் மரணச் செய்தியை அறிந்து, அயோத்திக்குத் திரும்புகின்றான், பரதன். அன்னையின் சதியை அறிகின்றான்.

அண்ணன், வனம் புகுந்ததும், தந்தை மரணம் அடைந்ததைக் கேட்டும், உள்ளம் கொதித்து அன்னையைச் சாடுகின்றான். பின்பு, ராமபிரானை தேடி அலைந்து பல நாட்கள் போராட்டத்திற்கு பின்னர், ராமரைக்கண்டான், பரதன். தான் குற்றம் அற்றவன், தனக்கு எதுவும் தெரியாது. எனக்கு நாடாளும் ஆசை அறவே இல்லை.

வனவாசம் திரும்பி மீண்டும் `ராமராஜியம்’ செய்ய வேண்டும் என்றுகூறி, ராமரிடம் கதறுகின்றான். `நான் கொடுத்த வாக்கை திருப்பப் பெற முடியாது. நீ.. என் மீது வைத்துள்ள அன்பும், பாசமும் புரிகிறது. இனி யார் கூறினாலும்.. ஏன் நானே கூறினாலும் நீ ராஜியத்தை ஏற்கமாட்டாய். எனக்கு நன்கு தெரியும்’ என்று யோசித்த ராமர், தனது திருவடிகளை அலங்கரிக்கும் பாதுகையை, பரதனிடம் வழங்கினார்.

பரதனுக்கு எல்லாம் புரிந்தது. தன்னுடைய தலையில் அந்த பாதுகையை வைத்துக் கொண்டு, நாடு திரும்பினான். பாதுகையை சிம்மாசனத்தில் வைத்தான் பரதன். `இனி, என் அண்ணன் ராமர் வரும் வரை, அவரின் இந்த பாதுகைதான் நாட்டுக்கு ராஜா’. என்று அறிவித்தார். 14 ஆண்டுகள் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து ராஜ்ய பரிபாலனம் செய்தது, பாதுகை. `ராமராஜ்ஜியத்தை’ ஆட்சி செய்த பெருமையும் இந்த பாதுகைக்குத்தான் உண்டு.

திருமாலின் மற்ற ஆயுதங்களான சங்கு, சக்கரம், போன்ற இத்யாதிகள் எல்லாம் வைகுண்டத்திலேதான் இருந்தது. ஆனால், மக்கள் அனைவரும் என்றென்றும் போற்றக் கூடிய வகையில், சிரசில் வைத்து இந்த பாதுகையை, மனிதர்களுக்கு சடாரியாக வழங்கும் பெருமை பெற்றது. ஒரு பாதுகையினுடைய அழுகுரலைக் கேட்டு அதன் வருத்தத்தைத் தீர்த்த திருமால், நம்முடைய மனதில் உள்ள குறைகளையும் அறிந்து நீக்குவார். நாம் அவருடைய திருவடியைப் பற்றி, சரணம்.. சரணம்.. என சரணாகதி அடைந்தால்!

தொகுப்பு: பொன்முகரியன்

The post பாதுகையின் வருத்தம் appeared first on Dinakaran.

Tags : Patugai ,Devaloka ,Vaikunda ,Kailayam ,Thirumal Paramapatha ,Nathan ,Vaikundam ,Pathugai ,
× RELATED கருணைக்குத் துணை நின்றவன்