×

ஆழ்வார் திருநகர் வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் பெற்றோர் புகார்: கோயம்பேடு காவல்நிலையத்தில் பரபரப்பு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (42). அதே பகுதியில் மிக்சர் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு விருதுநகரை சேர்ந்த அய்யனார் (27), தூத்துக்குடியை சேர்ந்த சின்னதுரை (23), அரியலூரை சேர்ந்த கலைவாணன் (29) ஆகியோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி அய்யனார், சின்னதுரை, கலைவாணன் ஆகியோர் ஒன்றாக மது அருந்தும் போது, தகராறு ஏற்பட்டது. இதில் கலைவாணன், சின்னதுரை ஆகியோர் உருட்டுகட்டையால் அய்யனாரை சரமாரியாக தாக்கினர். ரத்தவெள்ளத்தில் மயங்கினார். மறுநாள் கம்பெனிக்கு வந்த உரிமையாளர் கருப்புசாமி அதிர்ச்சியடைந்து, அய்யனாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் கலைவாணனை கைது செய்து சிறையிலடைத்தனர். தலைமறைவான சின்னதுரையை கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சசிராஜன், எஸ்ஐ யுவராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடினர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அய்யனார் நேற்று இறந்தார். உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். இதையடுத்து கொலை முயற்சி வழக்காக போலீசார் பதிவு செய்தனர்.

இந்நிலையில் பூந்தமல்லி ஜார்ஜ் கோல்டன் பகுதியில் பதுங்கி இருந்த சின்னதுரையை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் 3 பேரும் ஒன்றாக மது அருந்தியபோது, அய்யனார் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இதனால் 2 பேரும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மது அருந்திவிட்டு தகராறில் செய்ததால் சின்னதுரைக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், 85 வயது மூதாட்டியை தாக்கியதில் அவர் இறந்து போனதால் சின்னதுரை மீது கொலை வழக்கும் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் சின்னதுரையை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் போலீசாரிடம் சின்னதுரை அளித்த வாக்குமூலத்தில், ‘3 பேரும் ஒன்றாக மது அருந்தினோம். அய்யனாருக்கு போதை தலைக்கேறியதும், சம்பளம் பற்றி குறை சொல்லி ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டினார்.

ஒரு கட்டத்தில் என்னை அய்யனார் தாக்கினார். நானும் திருப்பி தாக்கினேன். இதை பார்த்த கலைவாணன் ஆத்திரத்தில் அய்யனாரை தாக்கினார். அவர் மயங்கியதும் பயத்தில் ஓடி விட்டோம்’ என்றார்.
இந்நிலையில் இறந்த அய்யனாரின் தந்தை இருதயராஜ், தாய் முனீஸ்வரி ஆகியோர் கோயம்பேடு காவல் நிலையத்தில், ‘எங்களது மகனின் சாவில் மர்மம் இருக்கிறது. மிக்சர் கம்பெனி உரிமையாளர் கருப்புசாமியிடம் விசாரித்தால் உண்மைகள் வெளிவரும். என் மகனை அடித்து கொலை செய்துள்ளனர்’ என்று கதறி அழுதனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நடவடிக்கை எடுப்பதால் சமாதானப்படுத்தி இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

The post ஆழ்வார் திருநகர் வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் பெற்றோர் புகார்: கோயம்பேடு காவல்நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Alwar Thirunagar ,Koyambedu police ,station ,Annanagar ,Karpusamy ,Alwarthinagar ,Koyambedu, Chennai ,Ayyanar ,Virudhunagar ,Chinnadurai ,Thoothukudi ,Kalaivanan ,Ariyalur ,Koyambedu ,police station ,
× RELATED சென்னையில் தெரிந்தது சர்வதேச விண்வெளி நிலையம்