×

விஐடியில் அகில இந்திய சமூகவியல் மாநாடு புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட சவால்களை சமாளிக்க தீர்வு காண வேண்டும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

வேலூர்: இந்திய சமூகவியல் சங்கத்தின் 48வது அகில இந்திய சமூகவியல் மாநாடு வேலூர் விஐடியில் 3 நாட்கள் நடக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்தும் 1,100 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: இந்தியா உலகளவில் 5வது பெரிய பொருளாதார நாடாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், தனிநபர் வருமானத்தில் உலகளவில் 139வது இடத்தில் இருக்கிறோம். 1991ம் ஆண்டு இந்தியா, சீனா இடையிலான சராசரி தனிநபர் வருமானம் வெறும் 20 டாலர் அளவு இடைவெளி மட்டுமே இருந்தது. அதாவது இந்தியாவில் 224 டாலராகவும், சீனாவில் 244 டாலராகவும் இருந்தது.

இப்போது, இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானம் 2,600 டாலராகவும், சீனாவில் 12,600 டாலராகவும் உள்ளது. இந்தளவு இருக்கும் வேறுபாட்டை களைய சமூகவியலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூற வேண்டும். நாம் விவசாய நிலங்களை இழந்து வருகிறோம். அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். விவசாய நிலங்களை இழக்கக்கூடாது. சமத்துவமின்மையில் இந்தியா மோசமான நாடாக இருக்கிறது. நாட்டில் உள்ள 10 சதவீத பெரும் பணக்காரர்களிடம் 80 சதவீதம் சொத்துக்களும், 50 சதவீத சாதாரண நபர்களிடம் வெறும் 6 சதவீதம் சொத்துக்களும் உள்ளன.

அதேநேரம், ஜிஎஸ்டி வரி செலுத்துபவர்களில் 50 சதவீதம் பேர் செலுத்தும் வரி 64 சதவீதமாகவும், 10 சதவீதம் பெரும் பணக்காரர்கள் செலுத்தும் வரி வெறும் 4 சதவீதமாகவும் இருக்கிறது. இந்நிலை மாற நாம் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசுகையில், ‘புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் சமத்துவமின்மை மற்றும் துருவ முனைப்பு போன்ற சவால்களுக்கு சமத்துவமான சமுதாயத்தை உறுதி செய்வதற்கு சமூகவியலாளர்கள் தீர்வு காண வேண்டும்’ என்றார். மாநாட்டில் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post விஐடியில் அகில இந்திய சமூகவியல் மாநாடு புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட சவால்களை சமாளிக்க தீர்வு காண வேண்டும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : All India Sociology Conference at VID ,Minister ,Palanivel Thiagarajan ,Vellore ,48th All India Sociology Conference ,Indian Sociology Association ,Vellore VID ,India ,USA ,South Africa ,Bangladesh ,Dinakaran ,
× RELATED பேருந்து சேவை இல்லாமல் மெட்ரோ ரயில்...