×

ஒரு மனுஷன் பிரிவுக்காக நாடே அழுதா அவர் ஒரு நல்ல தலைவன்… ரமணாப்பட வசனத்தை நிஜமாக்கிய கேப்டன்!!

சென்னை: ஒரு மனுஷன் பிரிவுக்காக நாடே அழுதா அவர் ஒரு நல்ல தலைவன் என்ற ரமணாப்பட வசனத்தை நிஜமாக்கிய கேப்டன் இறுதி ஊர்வலத்தில் வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைக்கின்றனர். காலஞ்சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கியது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. தீவுத்திடலில் இருந்து ஈ.வெ.ரா. பெரியார் சாலை வழியாக கோயம்பேடு நோக்கி விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்கிறது. விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள வாகனத்தில் பிரேமலதா, அவரது மகன்கள் உள்ளிட்டோர் உள்ளனர். விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர், கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அடக்கம் செய்யப்படும் சந்தப்பேழையில் ‘புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்ற வாசகம் உள்ளது. நிறுவனத் தலைவர் தேமுதிக எனவும், விஜயகாந்தின் பிறப்பு, இறப்பு தேதிகளும் பெட்டியில் இடம்பெற்றுள்ளன. கம்பீரமாக காட்சியளித்தவர் கண்மூடியதை பார்க்க முடியாமல் கண்ணீருடன் மக்கள் வழி அனுப்புகின்றனர். இறுதி ஊர்வலம் செல்லும் சாலையில் விஜயகாந்தின் பேனர்கள் உள்ளிட்டவை வழிநெடுகிலும் வைக்கப்பட்டுள்ளன. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீருடன் விஜயகாந்திற்கு வழியனுப்பி வைக்கின்றனர்.

இறுதி ஊர்வலத்தில் தேமுதிக கட்சிக் கொடி ஏந்தி திரளான தொண்டர்கள் கண்ணீருடன் பங்கேற்றுள்ளனர். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மக்கள், தொண்டர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் பிரியா விடையளிக்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படுகிறது. பின்னர் விஜயகாந்த் உடலுக்கு மலை 4.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.

 

The post ஒரு மனுஷன் பிரிவுக்காக நாடே அழுதா அவர் ஒரு நல்ல தலைவன்… ரமணாப்பட வசனத்தை நிஜமாக்கிய கேப்டன்!! appeared first on Dinakaran.

Tags : Nate ,Ramadan ,Chennai ,Demudika ,Vijayakanth ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...