×

சவாரி வந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் அபேஸ் செய்த ஆட்டோ டிரைவர்: செல்போன் சிக்னல் மூலம் சுற்றிவளைத்த போலீசார்

சோழிங்கநல்லூர்: வியாசர்பாடி சாமியார் தோட்டம் முதல் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவர் சுங்கத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீட்டிலிருந்து வருகிறார். இவரது மனைவி இன்பச்செல்வி (53). இவருக்கு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் கணக்கு உள்ளது. இதனால், அடிக்கடி வங்கிக்குச் செல்வதற்காக வியாசர்பாடி மேகிசின்புரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (33) என்பவரின் ஆட்டோவில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் ராஜேசுடன் ஆட்டோவில் சென்றுவிட்டு வரும்போது, வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை. எனது ஏடிஎம் கார்டு சரியாக வேலை செய்யவில்லை என இன்பச்செல்வி கூறியுள்ளார். அப்போது ராஜேஷ் உதவி செய்வதாகக் கூறி இன்பசெல்வியின் செல்போனை வாங்கி அதில் இந்தியன் வங்கியின் ஆன்லைன் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துள்ளார். அதன் பிறகு அவரது வங்கி கணக்கில் இருந்து 3 தவணைகளில் ரூ.3 லட்சத்தை தனது வங்கி கணக்கிற்கு ராஜேஷ் மாற்றியுள்ளார்.

வங்கியில் இருந்து வந்த குறுந்தகவல் அனைத்தையும் அழித்துவிட்டு, மீண்டும் செல்போனை இன்பச்செல்வியிடம் அவர் கொடுத்துவிட்டார். அதன்பிறகு இன்பச்செல்வி தனது உறவினருடன் வங்கிக்கு சென்றபோது தனது வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆன்லைன் மூலமாக ரூ.3 லட்சம் பரிமாற்றமாகியுள்ளதை கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த இன்பச்செல்வி இது குறித்து வியாசர்பாடி குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

வியாசர்பாடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வானமாமலை இதுகுறித்து வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்த போது, ராஜேஷ் என்பவரது வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டுள்ளதை தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் வழங்கி உள்ளனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களாக ராஜேஷின் வீட்டிற்குச் சென்ற போலீசார், அவரது வீடு பூட்டியிருந்ததால் திரும்பி வந்து விட்டனர். இதனையடுத்து வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் அவரது செல்போன் லோகேஷனை ஆய்வு செய்தபோது, அவர் வீட்டில் இருப்பது போன்று காண்பித்தது.

பின்னர் வீட்டிற்குச் சென்று பூட்டை உடைத்து பார்த்தபோது, அவர் வீட்டின் வெளியே பூட்டிவிட்டு உள்ளே அமர்ந்திருந்தது தெரிய வந்தது. போலீசார் தன்னை கைது செய்ய போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து அவர் இவ்வாறு நாடகம் ஆடியுள்ளார். பின்னர், அவரை கைது செய்தனர். விசாரணையில், இன்பச்செல்வியை ஏமாற்றி ராஜேஷ் ரூ.3 லட்சம் பரிமாற்றம் செய்ததும், அந்த பணத்தில் அவர் புதிய ஆட்டோ, புதிய இருசக்கர வாகனம் மற்றும் 2 சவரத்தில் தங்க நகைகள் வாங்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து ராஜேஷை கைது செய்து அவரது ஆட்டோ, இருசக்கர வாகனம், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சவாரி வந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் அபேஸ் செய்த ஆட்டோ டிரைவர்: செல்போன் சிக்னல் மூலம் சுற்றிவளைத்த போலீசார் appeared first on Dinakaran.

Tags : Chozhinganallur ,Govindaraj ,Vyasarpadi Samiyar Thodam First Street ,Customs Department ,Inpachelvi ,Dinakaran ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...