×

திருவொற்றியூரில் நிவாரண தொகை கோரி மறியலில் ஈடுபட்ட பெண்கள் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் நிவாரண தொகை வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்தனர். மிக்ஜாம் புயலால் திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த வெள்ளத்தோடு கச்சா எண்ணெய்யும் கலந்து வந்ததால் வீடுகள், வீட்டு உபயோக பொருட்கள், படகுகள், வலைகள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நிவாரண தொகை 7வது வார்டுக்கு உட்பட்ட ராஜாஜி நகர், காமராஜர் நகர், வஉசி தெருவில் உள்ள 150 குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து விடுபட்ட தங்களுக்கும் நிவாரண தொகை வழங்க கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் திருவொற்றியூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, மண்டல அலுவலர் நவேந்திரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நிவாரண தொகை வழங்கினால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர் கே.கார்த்திக் உட்பட 100 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இதே போல் 6வது வார்டுக்கு உட்பட்ட சரஸ்வதி நகர், ராஜா சண்முக நகர், சிவசக்தி நகர், அம்பேத்கர் நகர், சரவணா நகர், பொன்னியம்மன்மேடு, மதுரா நகர், பி.கே.எஸ்.கோபால் நகர், சுப்பிரமணிய நகர், கலைவாணர் நகர் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க கோரி முன்னாள் கவுன்சிலர் வேலாயுதம் தலைமையில் சத்தியமூர்த்தி நகரில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்டிஓ இப்ராஹிம் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் பேசியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post திருவொற்றியூரில் நிவாரண தொகை கோரி மறியலில் ஈடுபட்ட பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Mijam ,Ennore ,
× RELATED வாலிபரை பழிதீர்க்க வேண்டும் என்ற...