×

பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் அளிப்பதே என் லட்சியம்!

நன்றி குங்குமம் தோழி

மாதவிடாய் சுகாதாரம் என்பது அனைத்து பெண்களுக்கான ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்துகள் இல்லை. பெண்களுக்கு இயற்கை திட்டமிட்ட ஒரு முக்கிய நிகழ்வே மாதவிடாய். இளம் வயதில் மாதவிடாய் தொடங்கிய காலத்திலிருந்து மெனோபாஸ் காலம் வரை சில இனப்பெருக்க மாற்றங்களுக்கு உள்ளாகும் ஒரு முக்கிய கால கட்டமே இது. மாதவிடாய் நேரங்களில் சுகாதாரம் என்பது பெண்ணின் வாழ்வில் தவிர்க்க முடியாத பகுதி. இது பெண்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் நீண்டகால நல்வாழ்வுடன் தொடர்புடையது. மாதவிடாய் காலகட்டத்தில் சிறிது கவனக்குறைவாக செயல்பட்டால் அவர்களுக்கு பல வித நோய்த்தொற்று பாதிப்புகள் நேரிடலாம்.

மாதவிடாய் சமயங்களில் பழங்காலத்தில் சுத்தமான பருத்தி துணிகளை உபயோகித்து வந்தனர். ஆனால் இன்று கால மாற்றத்திற்கு ஏற்றவாறு வணிக ரீதியாக கிடைக்கும் ரசாயனம் மற்றும் ஆரோக்கியமற்ற நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். அதில் டையாக்ஸின்கள், பெட்ரோ கெமிக்கல்கள், செயற்கை வாசனை திரவியங்கள் போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, நீர்க்கட்டிகள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், எரிச்சல், துர்நாற்றம் மற்றும் மலட்டுத்தன்மை என கர்ப்பப்பை வாய் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு நாப்கினையும் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டியது மிக அவசியம் என்கிறார்கள். தற்பொழுது மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை சானிட்டரி நாப்கின்கள் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இம்மாதிரியான மூலிகை நாப்கின் தயாரிப்பதில் ஈடுபட்டுவரும் கோவையை சேர்ந்த பானுமதி சரவணன் இது குறித்து நம்மிடம் கூறியதாவது.

‘‘நான் கோவையில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். திருமணத்திற்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே தொழில் முனைவோராக வரவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அது தான் என்னுடைய லட்சியமாக வைத்திருந்தேன். திருமணத்திற்கு பிறகு என்னுடைய லட்சியத்தினை நோக்கி பயணிக்க துவங்கினேன். அதன்படி எனது வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்தேன். அதற்கு முதலில் என்னுடைய கல்வி தகுதியினை மேம்படுத்தினேன். பெண் தொழில்முனைவோர் குறித்து டிப்ளமா படிப்பினை படித்து தேர்ச்சிப் பெற்றேன். அந்த சமயத்தில் மூலிகை நாப்கின் பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் குறித்து தெரிந்து ெகாண்டேன்.

அதன் பிறகு அதையே என்னுடைய தொழிலின் மூலதனமாக மாற்ற முடிவு செய்து, அதற்கான வேலையில் ஈடுபட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் பல தடைகளை சந்தித்தாலும், சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடுதான் இந்த தொழிலில் இறங்கினேன். அவற்றை எல்லாம் கடந்து தான் நான் என் கனவு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இன்றும் என் முன்னால் நிறைய சவால்கள் அணிவகுத்து நின்று கொண்டிருந்தாலும், அதுதான் என்னை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறது.

மூலிகை நாப்கின்கள் பற்றி…

எங்களது நோக்கம் பெண்களுக்கு சுத்தமான நிம்மதியான ஆரோக்கியமான வழியில் மாதவிடாய் காலங்களை கடப்பதற்கு உதவுவதே. தற்போது பெண்களிடையே எங்கள் ‘சாய் சனா’ மூலம் தயாரிக்கப்படும் மூலிகை நாப்கின்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதில் வேம்பு, கற்றாலை, துளசி போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. சுத்தமான ரசாயனம் கலக்கப்படாத பஞ்சுகள் கொண்டு உருவாக்கப்படுகிறது. எங்களது தயாரிப்புகள் எளிதில் மக்கக்கூடியது.

இதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தர சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. பெண்களின் உடல் நலத்திற்காகவே ஆரோக்கியமான முறையில் மூலிகை நாப்கின்களை தயாரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.

இதன் சிறப்புகள் என்ன?

மூலிகை நாப்கின்கள் துர்நாற்றத்தை நீக்குகிறது. மிகவும் மென்மையானது. மாதவிடாய் காலங்களில் தொடையிடுக்குகளில் ஏற்படும் தோல் சிவத்தல் மற்றும் எரிச்சலை தடுக்கிறது. ஒவ்வாமைகள், அரிப்பு போன்றவற்றையும் தடுக்கிறது.மூலிகை நாப்கின்கள் பெண்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் மற்றும் தோல் அழற்சியிலிருந்து அவர்களை பாதுகாக்கவும், பாக்டீரியாவை அகற்றவும் பெரிதும் உதவுகிறது.

தொழிலின் அடுத்தகட்டம் குறித்து…

இதுவரை மூலிகை நாப்கின்களை கைகளால் தயாரித்து வந்த நாங்கள் தற்போது மிஷின் மூலமாக தயாரித்து வருகிறோம். நாப்கின்களின் தயாரிப்பு விலை குறைந்து இந்த மூலிகை நாப்கின்கள் பல பெண்களையும் அடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஏற்கனவே மூலிகை நாப்கின்கள் குறித்து பெண்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகள் இருப்பதால், இதன் அடுத்த கட்டமாக குழந்தைகளுக்கான சிறந்த சுகாதாரமான டயாப்பர்களை தயாரிப்பது குறித்தும் யோசித்து வருகிறேன். அனேகமாக எனது அடுத்த முயற்சிகள் அதுவாக இருக்கலாம்.

உங்களின் எதிர்கால லட்சியம்?

இந்த தொழிலில் ஈடுபட விரும்பும் பல பெண்களுக்கு பயிற்சி அளித்து பல புதிய பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும். எங்களுடைய தயாரிப்புகளை விற்பதன் மூலம் அல்லது ரீபிராண்ட் செய்வதன் மூலம் அதிக அளவில் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர முடியும். மேலும் பெண்களுக்கு இந்த தொழில் குறித்து பயிற்சியும் அளிக்கிறோம்.

இதிலிருக்கும் சவால்கள்…

இந்த தொழிலை முதலில் ஒரு தையல் இயந்திரம் மூலம் தான் ஆரம்பித்தேன். அதில் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டேன். அதன் பின்னரே எனது தேவைக்கு ஏற்ற வகையில் இயந்திரங்களை உருவாக்கி அதன்மூலம் எனது உற்பத்தி திறனை மேம்படுத்தி வருகிறேன். இதனால் எளிய மக்களும் வாங்கும் அளவிற்கு குறைந்த விலையில் தரமான நாப்கின்களை பெண்களுக்கு தர முடிகிறது. இது எனக்கு மிகுந்த மனதிருப்தியை தருகிறது என்கிறார் பானுமதி.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

The post பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் அளிப்பதே என் லட்சியம்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Dodhi ,
× RELATED புளிய மரங்கள் சொல்லும் கதை!