×

கட்சியின் பெயரில்கூட திராவிட உணர்வை பதித்தவர் விஜயகாந்த்; வெள்ளை உள்ளம் கொண்டு கருப்பு வைரமாகவே வாழ்ந்தவர்: கி.வீரமணி இரங்கல்

சென்னை: கட்சியின் பெயரில்கூட திராவிட உணர்வை பதித்தவர் விஜயகாந்த். வெள்ளை உள்ளம் கொண்டு கருப்பு வைரமாகவே வாழ்ந்தவர்; சிறந்த மனிதர் என்ற பெருமைக்குரியவர் விஜயகாந்த் என்று கி.வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள செய்தியில், திரையுலகில் முத்திரை பதித்த சிறந்த நடிகரும், தே.மு.தி.க. என்ற அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவருமான மதிப்புக்குரிய நண்பர் விஜயகாந்த் அவர்கள் (வயது 71) உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம், வேதனையடைகிறோம். வெள்ளையுள்ளம் கொண்டு கறுப்பு வைரமாகவே அவர் வாழ்ந்தவர்.

சிறந்த மனிதர் என்ற பெருமைக்குரியவர். பல ஆண்டுகளுக்கு முன்னரே அவருக்கு ‘பெரியார் விருது’ அளித்து மகிழ்ந்தவர்கள் திராவிடர் கழகத்தவர். கட்சியின் பெயரில்கூட “தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்“ என்ற திராவிட உணர்வைப் பதித்தவர். அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும். கலையுலகிலும், அரசியலிலும் தனித்த அடையாளத்துடன் வாழ்ந்து வரலாறு படைத்த அவரது மறைவால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அவரது துணைவியாரும், தே.மு.தி.க. பொதுச்செயலாளருமான திருமதி பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன்கள் உள்பட குடும்பத்தினர், தே.மு.தி.க.வின் பொறுப்பாளர்கள், கலையுலகத்தினர் எல்லோருக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கட்சியின் பெயரில்கூட திராவிட உணர்வை பதித்தவர் விஜயகாந்த்; வெள்ளை உள்ளம் கொண்டு கருப்பு வைரமாகவே வாழ்ந்தவர்: கி.வீரமணி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,K. Veeramani Irangal ,CHENNAI ,K. Veeramani ,Dravida ,Kazhagam ,President ,
× RELATED தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்: பிரேமலதா அறிக்கை