×

ரூ25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் சிறையில் அடைப்பு


முசிறி: திருச்சி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மண்டல துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(40). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பெயரில் முசிறியில் உள்ள ஒரு வீடு, ஒரு காலியிடத்துக்கு பட்டா பெறுவதற்காக முசிறி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரியில் கிருஷ்ணன் விண்ணப்பித்திருந்தார். கடந்த நவம்பர் மாதம் முசிறி கிழக்கு பகுதி விஏஓ விஜயசேகர், மண்டல துணை தாசில்தார் தங்கவேலை அழைத்து சென்று கிருஷ்ணனுக்கு சொந்தமான இடத்தை பார்வையிட்டார்.

பின்னர் மேல் விசாரணைக்காக தாலுகா அலுவலகத்துக்கு கிருஷ்ணனை அழைத்தனர். நேற்று முன்தினம் முசிறி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்ற கிருஷ்ணனிடம் ஒரு பட்டாவுக்கு ரூ.15,000 வீதம் 2 பட்டாவுக்கு ரூ.30,000 லஞ்சமாக கொடுக்க வேண்டுமென தங்கவேல் கேட்டார். இதற்கு கிருஷ்ணன் மறுத்ததால் ரூ.5,000 குறைத்து ரூ.25,000 கொடுக்க வேண்டுமென தங்கவேல் கூறியுள்ளார். இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் கிருஷ்ணன் புகார் செய்தார். இதையடுத்து நேற்று மாலை முசிறி தாசில்தார் அலுவலகம் சென்று மண்டல துணை தாசில்தார் தங்கவேலிடம் ரூ.25 ஆயிரத்தை கிருஷ்ணன் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார், தங்கவேலை கைது செய்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். லஞ்ச வழக்கில் கைதான தங்கவேலின் சொந்த ஊர், நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டியாகும்.

The post ரூ25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Musiri ,Trichy ,Krishnan ,Musiri, Trichy district ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி