×

கொப்பரைக்கான ஆதரவு விலை அதிகரிப்பு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், 2024 பருவத்தில் தேங்காய் எண்ணெய் தயாரிக்க பயன்படும் உயர் ரக அரவை கொப்பரை குவிண்டாலுக்கு ரூ.300, முழு கொப்பரைக்கு ரூ.250 குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு லாபமான விலையை வழங்குவதற்காக, அனைத்து பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அகில இந்திய அளவில் உற்பத்தி செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அளவில் நிர்ணயிக்கப்படும் என்று 2018-19-ம் ஆண்டின் பட்ஜெட்டில் அரசு அறிவித்தது.

அரவை கொப்பரையின் நியாயமான சராசரி தரத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,160 ஆகவும், முழு கொப்பரை குவிண்டாலுக்கு ரூ.12,000 ஆகவும் 2024 பருவத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரவை கொப்பரைக்கு, 51.84 சதவீதமும், முழு கொப்பரைக்கு, 63.26 சதவீதமும் லாபம் கிடைக்கும். அதிக குறைந்தபட்ச ஆதரவு விலை தென்னை விவசாயிகளுக்கு சிறந்த லாபகரமான வருமானத்தை உறுதி செய்வதோடு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வளர்ந்து வரும் தேங்காய் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்ய கொப்பரை உற்பத்தியை விரிவுபடுத்த ஊக்குவிக்கும்

*அதே போல் பீகார் மாநிலம் திகா மற்றும் சோன்பூர் இடையே கங்கை ஆற்றில் 4.56 கிமீ தூரத்துக்கு ரூ.3,064 கோடி செலவில் 6 வழிகளை கொண்ட பாலம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
* கடந்த நவம்பர் மாதம் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இத்தாலிக்கு சென்றிருந்தார்.
அப்போது இத்தாலியில் உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி கற்ற இந்திய மாணவர்கள் படிப்பை முடித்த பின் அங்கு தங்கியிருந்து படிப்பு சார்ந்த அனுபவம் பெற ஒரு வருடம் தற்காலிமாக தங்கியிருப்பதற்கும் அனுமதிக்கும் வகையில் இரு நாடுகள் ஒப்பந்தம் செய்தன. இந்த ஒப்பந்தத்திற்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
*மேலும், நியூசிலாந்தில் உள்ள அக்லாந்தில் துணை தூதரகம் அமைப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

The post கொப்பரைக்கான ஆதரவு விலை அதிகரிப்பு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,New Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...