×

பட்டா மாற்ற ரூ.25,000 லஞ்சம் துணை தாசில்தார் கைது

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (40). இவரது தாயாருக்கு சொந்தமான ஒரு வீடும், ஒரு காலியிடத்தையும் கிருஷ்ணன் பெயருக்கு மாற்ற கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பித்துளார். இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர் முசிறி கிழக்கு பகுதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்று விஏஓ விஜயசேகரனிடம் கேட்டுள்ளார். பின்னர் கடந்த நவம்பர் மாதம் விஏஓ விஜயசேகர், நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த மண்டல துணை தாசில்தார் தங்கவேலு ஆகியோர் கிருஷ்ணனுக்கு சொந்தமான இடத்தை பார்வையிட்டுள்ளனர். பின்னர் மேல் விசாரணைக்காக தாலுகா அலுவலகம் வரும்படி தங்கவேலு, கிருஷ்ணனிடம் கூறிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கிருஷ்ணன், முசிறி வட்டாட்சியர் அலுவலகம் சென்றார். அப்போது அவரிடம் பட்டா மாற்ற ரூ.30,000 லஞ்சமாக தங்கவேல் கேட்டுள்ளார். கிருஷ்ணன், தொகையை குறைக்கும்படி கேட்டதின் பேரில் ரூ.25000 லஞ்சமாக தர வேண்டும் என்று தங்கவேல் கூறியுள்ளார். இதையடுத்து கிருஷ்ணன், திருச்சி மாவட்ட லஞ்சஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் நேற்று மாலை 5.30 மணியளவில் முசிறி வட்டாட்சியர் அலுவலகம் சென்ற கிருஷ்ணன், அங்கிருந்த மண்டல துணை தாசில்தார் தங்கவேலிடம் ரூ.25000த்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் தங்கவேலை (51) கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக தங்கவேலிடம் விசாரணை நடந்து வருகிறது.

The post பட்டா மாற்ற ரூ.25,000 லஞ்சம் துணை தாசில்தார் கைது appeared first on Dinakaran.

Tags : Deputy ,Tahsildar ,Musiri ,Krishnan ,Musiri, Trichy district ,Dinakaran ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி