×

தோல்வி பயத்தால் ஓபிஎஸ் மகன் போட்டியிட மறுப்பு தேனியில் டிடிவி.தினகரன் போட்டி? குழுவை அமைத்து ரகசிய ஆய்வு

திருச்சி: தோல்வி பயத்தால் ஓபிஎஸ் மகன் போட்டியிட மறுத்து உள்ளதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் டிடிவி.தினகரன் போட்டியிட முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ரகசிய ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வர உள்ள நிலையில் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. பாஜ உடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தேனி தொகுதி எம்பியாக இருந்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், வேட்பு மனுவில் தவறான தகவல் அளித்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எம்பியான பிறகு தொகுதிக்கு அவர் ஏதுவுமே செய்யவில்லை என்று கூறப்படுகிறது. சொந்த ஊருக்கு சென்றால் வீட்டிற்கு செல்வதோடு சரி. தொகுதி மக்களுக்காக நலத்திட்டங்களை செய்யவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியை கூட முறையாக செலவழிக்கவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர்களே குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் நின்றால், நிச்சயம் தோல்வியடைவோம் என்று ஓபிஸ் மகன் கருதுவதால், இந்த முறை தேர்தலில் போட்டியிட போவதில்லை என அவர் தீர்மானித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சொந்த ஊரிலேயே தோல்வி பயத்தால் மகன் நிற்க மாட்டேன் என்று கூறியது ஓபிஎஸ்சுக்கு கவுரவ பிரச்னையாக உள்ளது. இதை சமாளிக்க ஓபிஎஸ் புது ரூட் எடுத்து உள்ளார். தற்போது ஓபிஎஸ்சும், டிடிவியும் அரசியலில் இணைந்து செயல்படுகின்றனர். இந்த சூழலில் வரும் தேர்தலில் டிடிவி.தினகரன் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.

இதற்காக தனது கட்சியினருக்கு செல்வாக்கு உள்ள தொகுதியை தேர்ந்தெடுத்து கள ஆய்வு மேற்கொள்ள ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில், தஞ்சை அல்லது தேனியில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட டிடிவி திட்டமிட்டார். காரணம், இந்த இரண்டு தொகுதிகளிலும் சமூக வாக்குகள் மற்றும் செல்வாக்கு உள்ளதால் இந்த தொகுதியை அவர் தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது, ஓபிஸ் மகன் போட்டியிட விரும்பாததாலும், ஏற்கனவே தேனி தொகுதி எம்பியாக இருந்ததாலும், தேனியில் போட்டியிட டிடிவி.தினகரன் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமமுக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: நாடாளுமன்ற தேஈர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடாமல் இருந்தால் நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு மாறிவிடும் நிலை ஏற்பட்டு விடும். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, தேனி நாடாளுமன்ற தொகுதியில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக டிடிவி தினகரன் நம்புகிறார். இதனால் அங்கு போட்டியிட்டால் வெற்றிவாய்ப்பு இருக்கும் என நினைக்கிறார். இதைத்தொடர்ந்து குழு ஒன்று அமைத்து அந்த குழுவினர், தேனி நாடாளுமன்றத்திற்குட்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் சென்று டிடிவி தினகரனுக்கு ஆதரவு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து சர்வே எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த பணி, ஜனவரி முதல் வாரத்தில் துவங்க உள்ளது. சர்வே முடிவு தனக்கு சாதகமாக வந்தால் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் டிடிவி போட்டியிடுவது உறுதி. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தோல்வி பயத்தால் ஓபிஎஸ் மகன் போட்டியிட மறுப்பு தேனியில் டிடிவி.தினகரன் போட்டி? குழுவை அமைத்து ரகசிய ஆய்வு appeared first on Dinakaran.

Tags : OPS ,TTV.Thinakaran ,Theni ,Trichy ,DTV.Thinakaran ,Dinakaran ,
× RELATED 2001, 2017ல் நான் முதல்வராயிருக்க முடியும்:...