×

இன்று அதிகாலையில் பரபரப்பு; நாகர்கோவிலில் ஆக்கர் கடையில் பயங்கர தீ

* வீடுகளுக்கும் தீ பரவி பொருட்கள், பைக்குகள் எரிந்து நாசம்
* குழந்தைகள், பெண்கள் உயிர் தப்பினர்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் ஆக்கர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அதில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. வீடுகளுக்கும் தீ பரவி பொருட்கள், பைக்குகள் எரிந்தன. வீடுகளில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஸ். வல்லன்குமாரன்விளையில் ஆக்கர் கடை வைத்து உள்ளார். அவரது கடையில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இன்று (புதன்) அதிகாலை 3 மணியளவில் லேசாக இதில் இருந்து புகை வந்தது. பின்னர் நேரம் செல்ல, செல்ல தீ பிடித்து எரிய தொடங்கியது. காற்றும் வேகமாக வீசியதுடன், அனைத்தும் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் சிறிது நேரத்தில் தீ மள,மள வென பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. உள்ளே இருந்து பொருட்கள் வெடிக்கும் சத்தமும் கேட்டது.

ஆக்கர் கடையை சுற்றி ஏராளமான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஆக்கர் பொருட்களில் பிடித்த தீ அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள்ளும் பரவியது. வீடுகளின் கதவுகள், ஜன்னல்களில் தீ பிடித்தது. ஜன்னல் வழியாக வீட்டுக்குள்ளும் தீ பரவி புகை மண்டலம் சூழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டுக்குள் இருந்தவர்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்பட வில்லை. பலர் குழந்தைகளுடன் வீடுகளில் இருந்து வெளியேறினர். ஒரு சில வீடுகளில் மட்டும் உள்ளே இருந்த மேஜை, ஷோபாக்கள், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் எரிந்தன. ஒரு வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த இரு பைக்குகளும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் மேற்பார்வையில் உதவி கோட்ட அலுவலர் துரை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்தனர்.

நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் உள்ள 2 தீயணைப்பு வண்டிகளும், தக்கலையில் இருந்த ஒரு தீயணைப்பு வண்டியும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. ஒரு பக்கம் தீ அணைந்தாலும் மறுபுறம் புகை வந்து கொண்டே இருந்தது. இதனால் ஜே.சி.பி. மூலம் குப்பைகளை பழைய ெபாருட்களை கிளறி தீயை அணைத்தனர். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. நாச வேலைக்கு திட்டமிட்டு மர்ம நபர்கள் யாராவது, குடிபோதையில் தீ வைத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. எனவே சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தார்களா? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக வீடுகளுக்குள் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் உயிர் தப்பினர் அதிகாலை 3 மணிக்கு என்பதால் ஒரு சிலர் கண் விழித்திருந்தனர். இதனால் தீ விபத்து பற்றி அக்கம் பக்கத்தில் எச்சரித்து அவர்களை வீடுகளில் இருந்து வெளியேற்றினர். நள்ளிரவில் யாரும் கவனிக்காத நிலையில் தீ விபத்து நிகழ்ந்திருந்தால், பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும் என அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.

தொடரும் தீ விபத்துக்கள்
கன்னியாகுமரியில் குப்பை மேட்டில் தொடர்ச்சியாக 3 முறை தீ விபத்து நடந்தது. தற்போது நாகர்கோவிலிலும் தீ விபத்து சம்பவம் தொடங்கி உள்ளது. நேற்று காலையில் வடசேரி பஸ் நிலையத்தையொட்டி உள்ள குப்பையில் மர்ம நபர்கள் தீ வைத்ததில், தீ கொளுந்து விட்டு எரிந்தது. வடசேரி பஸ் நிலையத்தை சுற்றி உள்ள சாலைகள் புகை மண்டலமாக மாறியது. பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இன்று அதிகாலையில் ஆக்கர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

The post இன்று அதிகாலையில் பரபரப்பு; நாகர்கோவிலில் ஆக்கர் கடையில் பயங்கர தீ appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Nagarko ,Nagarkoville ,Acker ,store ,
× RELATED சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க...