×

பகவத்கீதை உரை: ஒரு தபால்காரர் போல வாழவேண்டும்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 62

(பகவத்கீதை உரை)

ஆசை ஒரு புள்ளியில் ஆரம்பித்தாலும் அது உலகளாவியதாக வியாபித்துவிடும் தன்மை கொண்டது. ஒன்று, அடுத்தது, அதற்கும் அடுத்தது என்று அது வரையறை வகுத்துக்கொள்ள முடியாமல் திணறுகிறது. ஏதேனும் முட்டுக்கட்டை விழுந்தால், அதோடு திரும்பிவிடுவதில்லை. அந்த எதிர்ப்பையும் மீறிச் செல்ல முற்படுகிறது. இயலாதபோது அதனுடன் பொறாமை, பகை, குரோதம் எல்லாம் கைகோத்துக் கொள்கின்றன. இதனால் ஆசைக்கு ஆட்பட்ட ஒருவன் அழிந்து போகிறான். ஆகவே, ஆசையிலிருந்தும், அகங்காரத்திலிருந்தும் விடுதலை பெறும் ஒருவன், படிக்காவிட்டாலும் பண்டிதனாகிறான்! இவன் இயற்றும் கர்மாக்களில் பழுது இருப்பதில்லை, அவை ஆன்மாவுக்கு அர்ப்பணிக்கப்படுவதாகவே உள்ளன.

ஒரு பக்கம் ஆசை என்றால், இன்னொரு பக்கம் துக்கம். தனக்கு நேர்ந்ததே மிகப் பெரிய துக்கம் என்று ஒவ்வொருவரும் நினைத்துக்கொள்வதால் துக்கத்தின் பரிமாணம் அவரவர் மனநிலைக்கு ஏற்ப பெரிதாகிக்கொண்டே போகிறதே தவிர, அடங்குவதாகக் காணோம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி கைரேகை போல ஒவ்வொரு வருக்கும் தனித்தனி துக்கம். பிறஎல்லோருடையதை விடவும் தனக்கு ஏற்பட்டதுதான் தாங்கொணாதது என்ற மிகைப்படுத்துதல் ஒவ்வொருவருக்குள்ளும் அமைந்து விடுகிறது. இதனாலேயே ஒப்பீடும் நேர்கிறது. சில சந்தர்ப்பங்களில் ‘நாம் தேவலை’ என்ற தற்காலிக ஆறுதலும் கிடைக்கிறது.

உறவுகளையும், நட்புகளையும் எப்படி கொண்டாடுகிறோமோ இல்லையோ, ஆசையையும், துக்கத்தையும் வெகு கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடுகிறோம். ஒன்று போனால் இன்னொன்று அது நிறைவேறினாலும் சரி, நிறைவேறாவிட்டாலும் சரி. முற்றிலுமாக உதறிவிட முடிவதில்லை. அதனாலேயே நாம் இயற்றும் ஒவ்வொரு கர்மாவிலும் எதிர்பார்ப்புகள் கூடுகின்றன. இதனாலேயே இதெல்லாம் வெறும் செயல் களாகிவிடுகின்றன – வினை, எதிர்வினை என்ற பலாபலன்களோடு.

“த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராச்ரய
கர்மண்யபிப்ரவ்ருத்தோ பி நைவ கிஞ்சித் கரோதி ஸ’’ (4:20)

‘‘எந்தப் பற்றுமில்லாமல் எப்போதும் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதிலேயே திருப்தி கொள்பவன், தன் அபிமானங்களைத் தியாகம் செய்பவனாக இருக்கிறான். அதனாலேயே அவன் மிகச்சிறந்த முறையில் செயலாற்றுபவனாக இருக்கிறான். அதனாலேயே அவன் கர்மாக்கள் இயற்றாதவனாகவும் தோன்றுகிறான்.’’

வானம் நிர்மலமாக இருக்கிறது. அதனடியில் மேகங்களைக் கொண்டு சேர்க்கிறது காற்று. மேகங்கள் கருக்கின்றன. ஒருசில நிமிடங்களில் மேகங்கள் தமக்குள் முட்டிக்கொண்டு இடிகளை முழக்கி, மின்னலைப் பாய்ச்சுகின்றன. இன்னும் சற்று நேரத்தில் பெருமழை பொழிகிறது. மேகங்கள் கரைந்து போகின்றன. மீண்டும் வானம் நிர்மலமாகக் காட்சியளிக் கிறது. அதுவரை மேகங்கள் சூழ்ந்திருந்ததற்கான சுவடே இல்லை. இந்த வானத்திலிருந்தா மின்னல் ஒளிர்ந்தது, இடி பேரோசையுடன் இறங்கியது, தண்ணென்ற மழை பொழிந்தது என்று வியக்கும் அளவுக்கு வானம் நீல மௌனம் காக்கிறது.

அதுதான் அதன் கர்மா. மேகம் சூழ்ந்ததும், மின்னல் மின்னியதும், இடி இடித்ததும், மழை பொழிந்ததுமான அதுவரை நடந்த செயல்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல வானம் சலனமடையாமல் இருக்கிறது. வீடு வீடாகக் கடிதங்களைப்பட்டுவாடா செய்கிறார் ஒரு தபால்காரர். அவர் கொடுத்த கடிதத்தைப் பிரித்துப் படித்த ஒருவர் சந்தோஷத்தால் குதிக்கிறார். அவரை மகிழ்வூட்டும் செய்தி அந்தக் கடிதத்தில் இருக்கிறது. அதேபோல கடிதம் பெறும் இன்னொருவர் அதைப் பிரித்துப் படித்தபோது அப்படியே கதறி அழுகிறார். ஏனென்றால் இவரைத் துக்கப்படுத்தும் செய்தியை அந்தக் கடிதம் கொண்டுவந்திருக்கிறது.

தான் கொடுத்த கடிதத்தால் ஒருவர்சந்தோஷப்படுகிறார் என்பதற்காகத் தானும் மகிழ்வதும், இன்னொருவர் துக்கப்படுகிறார் என்பதற்காகத் தானும் அழுவதுமாக அந்த தபால்காரரால் நடந்துகொள்ள இயலுமா? அவருடைய கடமை கடிதங்களைப்பட்டுவாடா செய்வது மட்டுமே. பிறர் உணர்வுகளை இவர் பிரதிபலிக்கவேண்டிய அவசியம் இல்லை. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இந்த விஷயத்தை ஒட்டி ஒரு புராண சம்பவத்தைச் சொல்கிறார்:

வியாசமுனிவர் ஒருமுறை யமுனைக் கரைக்கு வந்தார். எதிர்க்கரைக்குப் போகவேண்டும் அவர். ஆனால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓடக்காரர்களோ அந்த வெள்ளத்துக்கு பயந்து ஓடத்தை இயக்க மறுக்கிறார்கள். இந்த சமயத்தில் ஏழெட்டு கோபிகைப் பெண்கள் அங்கே வருகிறார்கள். அவர்களும் யமுனை ஆற்றைக் கடந்து எதிர்ப்புறம் செல்லவேண்டும். ஓடமும் இல்லை. இந்தப் பெருவெள்ளத்தை எப்படிக் குறுக்காகக் கடப்பது?

வியாசரைப் பார்க்கும் அவர்கள், அவர் ஏதேனும் யோசனை சொல்வார் என்று நினைத்து அவரிடம் போய், அவரோடு தங்களையும் பத்திரமாக எதிர்க்கரைக்குக் கொண்டு சேர்க்க முடியுமா என்று கேட்கிறார்கள்.உடனே வியாசர், ‘‘கவலைப்படாதீர்கள். நான் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கிறேன். ஆனால் அதற்கு முன் நான் பசியாற வேண்டும். உங்களிடம் ஏதேனும் உணவுப் பொருட்கள் இருக்கின்றனவா, எனக்குத் தரமுடியுமா?’’ என்று கேட்கிறார்.

இப்போதைக்குப் பசியைபோக்கிக் கொள்ளும் இவரால் தங்களையும் அழைத்துக் கொண்டு எப்படி இந்த வெள்ளத்தைக் கடக்கும் ஆற்றலைப் பெறமுடியும் என்று யோசிக்கிறார்கள் பெண்கள். ஆனாலும், அவர் கேட்டபடி தம்மிடம் இருந்த வெண்ணெய், பால், தயிர் ஆகியவற்றைக் கொடுக்கிறார்கள்.

அவற்றை வாங்கி உண்ட வியாசர், நதியிடம், ‘‘யமுனையே, இன்று நான் உபவாசம் இருப்பது உண்மையானால், உன்னைக் கடந்து நான் அக்கரை செல்ல எனக்கு உதவுவாயாக. எனக்கு வழி கொடுப்பாயாக,’’ என்று வேண்டிக் கொண்டார். உடனே ஆறு வழிவிட்டது. வாரிவிட்ட தலைபோல வெள்ளம் இரண்டாகப் பிரிந்து நடுவே வகிடு போன்ற பூமிக்கோட்டைக் காட்டியது. வியாசர் அந்தப் பாதையில் முன்னேறிச் செல்ல, பெண்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

பெண்களுக்கு, ஆறு வழிவிட்ட திகைப்பைவிட, வியாசர் தம்மிடமிருந்து பொருட்களை வாங்கி உண்டுவிட்டு, ‘உபவாசம்’ இருப்பதாகச் சொன்னாரே அது பொய் இல்லையா என்ற உறுத்தல் அதிகமாகத் தோன்றியது. வியாசரின் தன்மையே அதுதான். அவர் எதையும் தனக்காகச் செய்துகொண்டவரே அல்லர். பகவானுக்குப் பசிக்கிறது, பகவானுக்கு தாகமெடுக்கிறது என்று ‘தன்னை’க் கருதிக்கொள்பவர் அவர். அதனால் அவர் சாப்பிட்டதும் அவருக்காக அல்ல! ஐம்புல உணர்வுகள் யாவற்றையும் அவர் தனக்குரியதாகக் கருதியதே இல்லை. இது அந்தப் பெண்களுக்குப் புரியாதுதான்!

இப்படி ஒரு சம்பவத்தைச் சொன்னாரே தவிர, பரமஹம்ஸரும் வியாசரைப் போன்றவர்தான். அவர் திடீரென்று நடனமாடுவார். அதற்கான காரணம் சுற்றியிருப்போர் யாருக்கும் தெரியாது. பகலில் கண்மூடிப் படுத்திருப்பார். அது தூக்கமா, தியானமா என்று யாருக்கும்புரியாது. பிரகாசமாக சிரிப்பார். கை, கால்களை வித்தியாசமாக அசைத்து அபிநயம் பிடிப்பார். பிறகு கேட்டால், ‘நானா, நானா அப்படிச் செய்தேன்?’ என்று எதிர்க் கேள்வி எழுப்புவார்.

ஏனென்றால், அந்த இயக்கமெல்லாம் அவருடையது அல்ல. எல்லாமே சர்வேஸ்வரனுடையவை. அந்தப் பரம்பொருளே எல்லாமாகவும், அவற்றுள் தானாகவும் வியாபித்திருப்பதாக பரமஹம்ஸர் தீர்மானித்திருக்கிறார். இதனால், அவர் கர்மா இயற்றினாலும், இயற்றாதவராகவே தோன்றுகிறார். ‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்ற, எல்லாமே பரந்தாமனுக்கு அர்ப்பணிக்கும் சொற்றொடருக்குச் சரியான உதாரணமாகத் திகழ்ந்தவர் பரமஹம்சர். எல்லாமே பரந்தாமன்தான், எதுவுமே அவருக்காகத்தான் என்ற எண்ணம் தோன்றும்போது சுயம் எங்கிருந்து வரும்? புலன் உணர்வு எப்படித் தெரியும்?

நாமாக நாமில்லாதபோது எல்லோருமே நாராயண ஸ்வரூபம்தானே! துரதிருஷ்டவசமாக நம்முடைய சுயம் பிறரைச் சார்ந்திருக்கிறது. ஆமாம், நாம் பெரும்பாலும் பிறருக்காகவே வாழ்கிறோம். நம் உடலை மறைக்கத்தான் உடையென்றாலும், அதையும் அலங்காரமாகத்தான் செய்துகொள்கிறோம். ஆழ்ந்து யோசித்தோமானால் அந்த அலங்காரம் நமக்குத் தேவையில்லாதது, அனாவசியம் என்பது புரியும். ஆனாலும் அலங்காரம் செய்துகொள்கிறோம்.

எதிர்ப்படுபவர் நம் அலங்காரத் தோற்றத்தைக் கண்டு வியந்து புருவம் உயர்த்தவேண்டும், நம்மிடம் அந்த ஆடை எங்கே வாங்கியது என்று கேட்கவேண்டும், ‘உனக்கு மிகவும் பொருத்தமாக, அழகாக இருக்கிறது’ என்று சொல்லவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கிறோம். அதேசமயம் அவர்கள் அப்படி நம்மை கவனிக்காவிட்டால், நம்மைப்புறக்கணித்தால், நாம் துவண்டும் போகிறோம்.

ஏன், அவர்கள் பாராட்டாவிட்டால் நம்மிடமிருந்து என்ன குறைந்துவிடப் போகிறது, பாராட்டிவிட்டால் என்ன அதிகரித்துவிடப் போகிறது? அதிகரிப்பதும் குறைவதும் நம் மன சந்தோஷம் அல்லது துக்கம்தானே தவிர வேறு எதுவும் இல்லை என்பதுதானே யதார்த்தம்? அப்படி ஒரு மனநிலையை ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும்? பாராட்டோ, இகழ்ச்சியோ எதுவும் நம் மனசுக்குள் இறங்காதவரை நாம் லேசாகத்தான் இருக்கிறோம்.

இந்த லேசான நிலைதான் நாம் பரந்தாமனுடன் ஒன்றிவிடுவது. வேடிக்கையாகச் சொல்வார்கள், மனசும், மனிபர்ஸும் ஒன்றுதான். சில்லரைகளை இறக்கிவைத்துவிட்டால், இரண்டுமே லேசாகிவிடும்! உண்மைதானே! ஆகவே இப்படிப்பட்ட நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை, எந்த விரக்தியும் இல்லை. எல்லாம் அவனுடையதே, அவனுக்குரியதே என்று பகவானிடம் அர்ப்பணித்துவிட்டால், இப்படி மனம் லேசாவது எளிதில் சாத்தியமாகும்.

ஒரு கட்டத்திலிருந்து அடுத்த உயர்வுக்குச் செல்லவேண்டியதுதான் வாழ்க்கையின் இலக்கணம். அந்த உயர்வு எது, எப்படி என்று யோசிக்கும்போதுதான் சுயம் குறுக்கிடுகிறது. இறைவனுடன் ஒன்றிவிடுவதாகிய உயர்வு, வயதைப் பொறுத்தது என்று நாம் கற்பனை செய்துகொள்வதால்தான், அந்த ‘வயது’வரை நாம் பல்வேறு எதிர்மறை குணங்களை, உயர்வுகளோடு சேர்த்து வளர்த்துக் கொள்ளும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறோம்.

அதனாலேயே கடமைகளை நிறைவேற்றுவது என்பதை, நாம் அவற்றை ஆதாயத்தைத் தேட முயற்சிக்கும் நடவடிக்கைகளாகவே மேற்கொண்டுவிட்டோம். படிப்பது என்ற கர்மா, அறிவை வளர்த்துக் கொள்ளதான் என்பதைவிட, எதிர்காலத்தில் நல்ல வேலையில் அமர்ந்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தான்மேற்கொள்ளப்படுகிறது. அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளும் அப்படியே. ஏதோ ஒரு எதிர்பார்ப்பு அல்லது ஏக்கம். எல்லாவற்றையும்விட ‘எதிர்காலம் என்னவாகுமோ’ என்ற பயம்! எல்லாமே நிச்சயமற்றதாக இருக்கும்போது இந்தகற்பனை பயம் மட்டும் நிச்சயமானதாகப் படிந்து விடுகிறது!

இந்த பயத்துக்குக் காரணம், முக்கியமாக நம்பிக்கையின்மை. அதாவது, சொந்தத் தகுதியின்மீது நம்பிக்கையின்மை. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற முடியாதோ என்ற நம்பிக்கையின்மை. எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மை இறைவன் கைவிட்டு விடுவானோ என்ற நம்பிக்கையின்மை! ‘உன் கர்மாக்களைச் செய்துகொண்டே இரு, பிற அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று பரந்தாமன் பலவாறாக அறிவுறுத்தியும், பயம்! இதனால்தான் ஞானிகள் கர்மாக்களை இயற்றுவது மட்டுமே தம் பணி என்று எந்த சலனத்துக்கும் ஆட்படாமல் இயங்கிக்கொண்டிருக் கிறார்கள்.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post பகவத்கீதை உரை: ஒரு தபால்காரர் போல வாழவேண்டும்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்