×

ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும்

*அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி : ப்ரீ பெய்டு மின் மீட்டர் திட்டத்தில் விவசாயிகள், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி 2024-2025ம் கல்வியாண்டுக்கான நாட்காட்டியை கல்வியமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார். பின்னர் அவர் கூறுகையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் 126 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் ஒன்றிய அரசின் இடைநிலை கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024-25 கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி ஏப்ரல் 1ம் தேதி வகுப்புகள் துவங்கி மார்ச் 31ம் தேதிவரை நடைபெறும். இதில் கோடை விடுமுறை மே மாதம் அளிக்கப்படும்.

தமிழகத்தில் ஆசிரியர்கள் சேலையைபோல் சுடிதார் அணிந்து செல்லலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். இதனை புதுச்சேரியில் அமல்படுத்துவது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்ற பெயரில் சட்டம்- ஒழுங்கு சீர்குலையும் அளவில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது. ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்த காங்கிரசுக்கு எந்த தகுதியும் இல்லை. முதலில் நகரப்பகுதியில் 40 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதே முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் அமைச்சராக இருந்தபோதுதான்.

இன்றைக்கு மக்களை திசை திருப்பவே போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது மக்களை ஏமாற்றும் நாடகம். மின் கட்டணத்தை பொறுத்தவரை அரசாங்கம் நிர்ணயம் செய்யவில்லை. இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் நிர்ணயிக்கிறது. மத்திய மின்துறை அமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளோம்.

மின்சாரத்தை கொள்முதல் செய்யும் போது, விலை அதிகரிக்கிறது, இதனை நுகர்வோரிடம் வசூலிக்க வேண்டிய கட்டாய சூழலில், எங்கே மின்சாரம் கொள்முதல் விலை குறைவாக இருக்கிறதோ, அங்கிருந்து புதுச்சேரிக்கான மின் தொகுப்பை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்தினாலும், விவசாயிகள் மற்றும் குடிசைகளுக்கு வழங்கும் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

`நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசும் அதிமுக’

அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், சமூக நலத்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிள் தரம் இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. முதல்வர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுப்பார். அதிமுகவினர் நிறைய கருத்துகளை கூறுகிறார்கள். சைக்கிளுக்கு பதிலாக பணம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லை பொருளாக கொடுக்க வேண்டும் என நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசுகிறார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு பணியிடங்களை நிரப்புவதாக எதிர்கட்சிகள் புரிதல் இல்லாமல் கூறி வருகிறார்கள். இதற்கு விளக்கம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

145 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. வெகு விரைவில் பணி ஆணை வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் 300 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 91 விரிவுரையாளர்கள், 45 மொழிப்பாட ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையும் வெகு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

இதற்கான நிர்வாக முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 3 மாத காலமாகும். அந்த இடைப்பட்ட காலத்துக்குள் பாடத்திட்டத்தை நடத்தி முடிக்க வேண்டிய சூழலில், தற்காலிகமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமிக்க இருக்கிறோம். இது நிரந்தரமான முடிவு அல்ல என்றார்.

The post ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் appeared first on Dinakaran.

Tags : Minister ,Namachivayam ,Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி முதலமைச்சராக 4ம் ஆண்டு...