×

விதை தெளிக்கும் சிவபெருமான்

காரைக்காலில் உள்ள பார்வதீஸ்வரர் ஆலயத்தில் அருட்பாலிக்கும் இறைவன் பார்வதீஸ்வரர். இறைவி பெயர் சுயம்வரத பஸ்வினி என்பதாகும். இந்திர பதவியில் இருந்த தேவராஜன் விஷிராகரனைக் கொன்றான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. கொடி வடிவில் அது தொடர்ந்து அவனை துன்புறுத்தியது. தேவராஜன் தொஷ்டாவை இந்திர பதவியில் அமர்த்திவிட்டு பூவுலகம் சென்றான். தொஷ்டா தன் இரு மகள்களையும் சூரியனுக்கு மணம் முடித்து வைத்தான். ஆனால் . சூரியனின் பிரியம் சுவர்ச்சிலையிடம் மட்டுமே இருந்தது.

சாயாதேவியிடம் பாராமுகமாய் நடந்து கொண்டான். இந்த தகவலை நாரதர் மூலம் அறிந்த தொஷ்டாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. சூரியனை ஒளி இழக்கும்படி சபித்தான். தனக்கு ஏற்பட்ட அவமானத்தை உணர்ந்த சூரியன் தன் தேவியருடன் பூலோகம் அடைந்தான். சமீவனநாதரை நோக்கி தவம் செய்து வணங்கி, லிங்கத்திற்கு மேல் பாகத்தில் தாமரை ஓடை உண்டாக்கி, அந்த நீரால் இறைவனை வணங்கி துதித்தான். அவனது பிரார்த்தனை பலித்தது. சமீவனநாதர் அவன் முன் தோன்றி ‘என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார்.

சூரியனும் அவரை மகிழ்வோடு வணங்கி “நாங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். என்னால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் என் பெயரால் சூரிய புஷ்கரணி என்று அழைக்கப்பட வேண்டும். அதில் நீராடுபவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட வேண்டும். எனக்கு தொஷ்டா இட்ட சாபம் நீங்க வேண்டும். தங்களுக்கும் என் நாமத்தால் பெயரிடப்பட வேண்டும். எனக்கு இரு பிள்ளைகள் பிறக்க வேண்டும்” என்று கேட்க சமீவனநாதரும் அவ்வாறே அருளினார்.

இதன்படி இத்தலத்து இறைவன் பாஸ்கரலிங்கம் என்றும் தீர்த்தம் சூரிய புஷ்கரணி எனவும் தலம் பாஸ்கர க்ஷேத்திரம் எனவும் இன்றும் அழைக்கப்படுகிறது.ஆலயம் அமைந்துள்ள இடம் திருத்தெளிச்சேரி எனவும் அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்கு பல பெயர்கள் உண்டு. இத்தலம் கிரேதாயுகத்தில் சமீவனம் எனவும், துவாபர யுகத்தில் ஆனந்தவனம் எனவும் அழைக்கப்பட்டு இந்த கலியுகத்தில் முக்திவனம் என அழைக்கப்படுகிறது.

இத்தலத்திற்கு திருத்தெளிச்சேரி என்று பெயர் வந்ததற்கு காரணம் உண்டு. ஒரு சமயம் சோழ நாட்டில் மழையின்றி பஞ்சம் ஏற்பட்டது. ஊர் எங்கும் மக்கள் பசி பட்டினியால் தவித்தனர். அதனால் அரசன் இத்தல இறைவனை வழிபட்டு மக்களின் வேதனையை போக்கும்படி வேண்டி நின்றான்.கருணை கொண்ட இறைவன் மழை பொழியச்செய்தார்.

பின் இறைவனே உழவனாக வேடங்கொண்டு விதை தெளித்தார். இதனால்தான் இத்தலம் திருத்தெளிச்சேரி என அழைக்கப்படுகிறது. இன்றும் ஆனி மாதம் விதை தெளி உற்சவம் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. இறைவன்-இறைவி எதிரே உள்ள சூரிய புஷ்கரணிக்கு எழுந்தருளி விதை தெளிக்கும் வைபவம் நடைபெறும். பின்னரே விவசாயிகள் விதை தெளிக்கத் தொடங்குவர்.

கோயிலின் ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை ராஜ கோபுரமும் அடுத்து கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்துள்ள மகாமண்டபத்தின் வட திசையில் இறைவி சுயம்வர தபஸ்வினியின் சந்நதி உள்ளது. அன்னை இங்கு நான்கு திருக்கரங்களுடன் தென்திசை நோக்கி முகத்தில் இளநகை தவழ காட்சி அளிக்கிறாள்.

திருச்சுற்றில் மேற்கில் வள்ளி, தெய்வானை, முருகன், கஜலெட்சுமியுடன் தெற்கில் நடராஜர் சிவகாமியும், வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்களும் கிழக்கில் பைரவர், சூரியன், ரேணுகாதேவி, சனீஸ்வரர், பிடாரி அம்மன் ஆகியோர் அருட் பாலிக்கின்றனர். இதனை அடுத்து மகாலிங்கமும் தெற்கில் அறுபத்து மூவர் திருமேனிகளும் உள்ளன. தேவக்கோட்டத்தில் துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருட்பாலிக்கின்றனர்.

வடகிழக்கில் சண்டீஸ்வரர் சந்நதி உள்ளது. இங்கு நடைபெறும் சூரிய பூஜை மிகவும் விசேஷமானது. இறைவனை வழிபட்டு சூரிய பகவான் சாபம் நீங்கப் பெற்றதால், ஆண்டு தோறும் பங்குனி மாதம் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை அஸ்தமனச் சூரியன் தன் பொன் நிறக்கதிர்களால் இறைவனை ஆராதனை செய்யும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அந்த நாட்களில் சூரிய பூஜை வெகு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது.

சூரியனின் கதிர்கள் சுமார் 4 மணி அளவில் மூலவரின் கருவறை வழியாக சிவபெருமானின் சிரசில் படும். தாமரை மலர் கொண்டு மூலவருக்கு ஆராதனைகளுடன் அபிஷேகங்கள் நடைபெறும். அபிஷேகத்திற்கு தேவையான தீர்த்தங்கள் எதிரே உள்ள சூரிய புஷ்கரணியிலிருந்து கொண்டு வரப்படும்.காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

தொகுப்பு: மகி

The post விதை தெளிக்கும் சிவபெருமான் appeared first on Dinakaran.

Tags : Lord Shiva ,Parvatheeswarar ,Parvatheeswarar temple ,Karaikal ,Swayamvaratha Pasvini ,Indra ,
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்