×

பண்பொழி அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமையை மீட்ட போது வனத்துறையினரை முட்டியதால் பரபரப்பு

செங்கோட்டை : பண்பொழி அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமையை மீட்ட போது துள்ளி குதித்து வெளியே வந்த காட்டெருமை வனத்துறை ஊழியர்கள் 2 பேரை முட்டி தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த வனத்துறையினர் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.பண்பொழி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி வண்டாடும் பொட்டல் புது குளத்திற்கு கீழ்புறம் முகமது இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் நேற்று காட்டெருமை தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனைப்பார்த்த முகமது இஸ்மாயில், செங்கோட்டை தீயணைப்பு நிலையம் மற்றும் கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செங்கோட்டை தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர்கள் செல்வன், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடையநல்லூர் வனத்துறையினர் விரைந்து விரைந்து வந்தனர்.அவர்கள் கயிறு கட்டி கிணற்றிலிருந்து காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் காட்டெருமையை வெளியில் கொண்டு வந்தனர்.

அப்போது திடீரென காட்டெருமை துள்ளி குதித்து மேக்கரை வனப்பணியாளர்கள் அப்பலவாணன், பால்ராஜ் ஆகியோரை முட்டி தள்ளி தூக்கி வீச முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறை பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு ஊழியர்கள் இணைந்து கூச்சலிட்டு காட்டெருமையை விரட்டியடித்தனர். பின்னர் காயமடைந்த வனப்பணியாளர்கள் இருவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post பண்பொழி அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமையை மீட்ட போது வனத்துறையினரை முட்டியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Panbozhi ,Senkottai ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...