×

50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய புங்கம்பள்ளி குளம் பூஜை செய்து மலர் தூவி வழிபட்ட விவசாயிகள்

சத்தியமங்கலம் : பு.புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி குளம் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிரம்பியுள்ளதால் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேசிபாளையம் ஊராட்சியில் 66 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான புங்கம்பள்ளி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு சுற்று வட்டார பகுதி கிராமங்களில் பெய்யும் மழை நீர் வரத்தாக இருந்து வந்தது. எனினும் இந்த குளத்தில் முழு கொள்ளளவு தண்ணீர் 50 ஆண்டுகளுக்கு முன்பு 1972ம் ஆண்டில் குளம் நிறைந்து தண்ணீர் வெளியேறியதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

முட்புதர்கள் நிறைந்திருந்த இந்த குளத்தை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் அரசு அனுமதி பெற்று தூர் வாரப்பட்டது. மேலும் இந்த குளம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த கனமழை காரணமாக சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் நீரோடைகள் வழியாக புங்கம்பள்ளி குளத்திற்கு நீர் வர தொடங்கியது.

தொடர்ச்சியாக, பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் தற்போது 90 சதவீத அளவிற்கு குளம் நிரம்பி உள்ளது. இதனால் 66 ஏக்கர் பரப்பளவு கொண்ட புங்கம்பள்ளி குளம் கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும் குளத்தில் உள்ள மரங்களில் பறவைகள் முகாமிட்டுள்ள காட்சி காண்போர் கண்களை கவர்ந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு புங்கம்பள்ளி குளம் நிறைந்துள்ளதால் குளத்தின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிணறுகள் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், இதனால் இந்த ஆண்டு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்பாடு ஏற்படாது என அப்பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர்.

குளத்தில் நீர் நிறைந்துள்ளதால் தேசிபாளையம், புங்கம்பள்ளி, சுங்கக்காரன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குளத்தை நேரில் பார்வையிட்டு வருகின்றனர். மேலும், விவசாயிகள் குளத்தின் கரையில் தேங்காய் பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து பூஜை செய்து வழிபட்டு குளத்து நீரில் மலர்கள் தூவினர். தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்து குளம் நிறைய வேண்டும் என கடவுளை வேண்டி பூஜை செய்து வழிபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

The post 50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய புங்கம்பள்ளி குளம் பூஜை செய்து மலர் தூவி வழிபட்ட விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Pungampally pond ,Sathyamangalam ,Pungampalli pond ,Puliambatti ,
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...