×

சபரிமலையில் இன்று மண்டல பூஜை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று மண்டல பூஜை நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடந்தது. மண்டல பூஜையையொட்டி பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல கால பூஜைகளுக்காக, கடந்த நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நெரிசல் மூலம் விபத்து ஏற்படாமல் இருக்க பக்தர்களை பல இடங்களில் தடுத்து நிறுத்தி படிப்படியாகவே சன்னிதானத்திற்கு போலீசார் அனுப்பி வைத்து வருகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக சராசரியாக தினமும் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்து வந்தனர். கடந்த 24, 25ம் தேதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று வரை 32 லட்சத்திற்கும் அதிகமானோர் சபரிமலைக்கு வந்துள்ளனர். கடந்த 3 தினங்களாக 16 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதற்கிடையே தங்க அங்கி ஊர்வலம் நேற்று மாலை 5 மணியளவில் சரங்குத்தியை அடைந்தது. அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று(27ம் தேதி) நடக்கிறது. இன்று காலை 10.30க்கும் 11.30 மணிக்கும் இடையே மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இன்றுடன் இந்த வருட மண்டல காலம் நிறைவடையும். மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.

* கடந்த வருடத்தை விட வருமானம் குறைவு
சபரிமலையில் மண்டல காலத்தில் 39 நாட்களில் ரூ.204.30 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் கடந்த வருடம் இதே நாட்களில் ரூ.222.98 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் ரூ.18 கோடிக்கு மேல் வருவாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சபரிமலையில் இன்று மண்டல பூஜை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Mandal ,Ayyappan ,Thiruvananthapuram ,Mandal Puja ,Ayyappa swami ,Deeparathan ,Ayyappa ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்