×

அதிகார போதை, பணத் திமிரில் உள்ளார் ரகசியங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி திகார் சிறைக்கு போவார்: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு

சூலூர்: ‘நான் ரகசியங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறைக்குதான் செல்ல வேண்டும்’ என்று ஓ.பன்னீர்செல்வம் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிச. 26ம் தேதி முதல் ஜன.24ம் தேதி வரை மாவட்டங்கள் வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தனது சுற்றுப்பயணத்தை நேற்று கோவையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். கோவை மாவட்டம் சூலூரில் தனது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: கழகத்தின் பொருளாளராக 12 ஆண்டுகள் இருந்தவன் நான். எங்களை கழகத்தில் இருந்து வன்முறையாக வெளியேற்றிவிட்டனர். சசிகலா உங்களுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தார்கள். அவர்களை நீங்கள் என்ன வார்த்தையில் பேசினீர்கள்?. 11 எம்எல்ஏ ஆதரவுடன் இருந்த நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்து இருந்தால் ஆட்சி போயிருக்கும். நான் ஆதரவு கொடுத்ததால் ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்பட்டது. தவறான வழியில் சென்றபோது எச்சரித்தேன். ஆனால் அதிகார போதை, பணத் திமிரில் இருந்தார் எடப்பாடி. அதனால் ஆட்சி போனது.

அடுத்தடுத்து தேர்தல்களிலும் தோற்றுப்போனதால் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்றுதானே அர்த்தம். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாக வர இருத்தை தடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. தனிக்கட்சி துவங்கும் நோக்கமில்லை. கோரப் பிடியில் இருந்து அதிமுகவை கைப்பற்றி மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மாவிடம் ஒப்படைத்தால்தான் நன்றியாக இருக்கும்.

முதல்வர் பதவி மூன்று முறை கொடுத்தார்கள். நான் திருப்பி கொடுத்துவிட்டேன். என்னை யாரும் துரோகி என்று சொல்ல முடியாது. நாங்கள் செய்த குற்றம் என்ன? இன்னமும் கட்சி தொண்டர்களின் உரிமைக்காக பாடுபட்டு வருகின்றேன். ஆட்சியில் இருந்தபோது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும். அந்த ரகசியங்களை நான் அவிழ்த்துவிட்டால், எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறைக்குதான் செல்ல வேண்டும். இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.

* ஆக்சிடென்ட் பொதுச்செயலாளர் சீக்கிரம் அவுட் ஆகி விடுவார்
கூட்டத்துக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: ஜனவரி 19ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்றது. அந்த வழக்கில் பொதுக்குழு தீர்மானம் தொடர்பான முடிவு கிடைக்கும். ஈரோட்டில் இரட்டை இலை தற்காலிகமாகத்தான் கொடுக்கப்பட்டது. என் மீது என்ன குற்றம் சொல்கின்றனர்? என்னை நீக்குவதற்கு என்ன காரணம் சொல்கின்றனர்? யாருக்கு நான் நம்பிக்கை துரோகம் செய்தேன்? என்பதை சொல்ல முடியுமா?.

நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் அதை நீக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது? அந்த சேரில் போய் உட்காரலாமா? எடப்பாடி பழனிசாமி ஆக்சிடென்டில் பொதுச்செயலாளர் ஆனார். சீக்கிரம் அவுட் ஆகி விடுவார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

* ஜானகி விஷயத்தில் எடப்பாடி நாடகம்
‘புரட்சித் தலைவர் மனைவி ஜானகி அம்மாளுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் மாற்று கருத்து இல்லை. அதிமுக தலைமை கழகம் ஜானகி அம்மாவின் சொத்து. தலைமை அலுவலகத்தில் கீழே இருக்கும் அரங்கத்திற்கு ஜெயலலிதா பெயரும், மேலே இருக்கும் அரங்கத்திற்கு ஜானகி அம்மாள் பெயரும் வைக்க வேண்டும் என ஜேசிடி பிரபாகரன் சொன்னபோது எடப்பாடி பழனிச்சாமி வைக்கவில்லை.

முகத்தை சுளித்தார். எம்ஜிஆர் பெயரை மட்டும் வைத்துவிட்டு ஜெயலலிதா, ஜானகி ஆகியோர் பெயரை வைக்காமல் ஏமாற்றிவிட்டு எடப்பாடி இப்பொழுது நாடகமாடுகிறார்’ என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

* ஜெயலலிதா என்னிடம் ரூ.2 கோடி கடன் வாங்கினார்
ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘கழகத்தின் பொருளாளராக அதிமுக சரித்திரத்தில் 12 ஆண்டுகள் இருந்தவன் நான்தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா அந்த பொறுப்பை எனக்கு தந்தபோது ரூ.2 கோடி கழகத்துக்கு பற்றாக்குறை இருந்தது. 2 வருடத்தில் அது ரூ.4 கோடி ஆனது. ஒருநாள் அம்மா என்னிடம், பன்னீர்செல்வம் எனக்கு தனிப்பட்ட முறையில் நிதிச்சுமை இருக்கிறது.

வழக்குகள் என் மீது போடப்பட்டுள்ளது. அவர்களுக்கு வங்கிகள் மூலமாக பணத்தை கொடுக்க வேண்டும். எனவே கழக நிதியில் இருந்து எனக்கு ரூ.2 கோடி கடனாக தாருங்கள். ஒரு வருடத்தில் திருப்பி தந்துவிடுகிறேன் என கூறினார். நான் அதை கொடுத்து ஒரு மாதத்தில் அதை திருப்பி தந்தார். இதுதான் வரலாறு’’ என்றார்.

The post அதிகார போதை, பணத் திமிரில் உள்ளார் ரகசியங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி திகார் சிறைக்கு போவார்: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Tihar Jail ,O. Panneerselvam ,Sulur ,Edappadi Palanichami ,
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...