×

ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் சாலையில் வாகன விபத்துகளை தடுக்க வேகத்தடைகளுக்கு பெயின்ட்: எஸ்பி உத்தரவால் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் சாலைகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வேக தடைகளுக்கு நெடுஞ்சாலை துறையினர் சார்பில் பெயின்ட் அடிக்கப்பட்டு வருகிறது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் திருவள்ளூர் செல்லும் சாலை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி அருகிலும், சத்தியவேடு செல்லும் சாலை மசூதி அருகிலும் மற்றும் போந்தவாக்கம் பேருந்து நிறுத்தம், ஒதப்பை, சீத்தஞ்சேரி, புல்லரம்பாக்கம் பகுதி என 30க்கும் மேற்பட்ட இடங்களில் விபத்துகளை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டது.

அப்போது, வேகத்தடை வாகன ஓட்டிகளுக்கு அடையாளம் தெரிவதற்காக வெள்ளை நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டது. அதன் மீது வாகனங்கள் சென்றதால் தற்போது அழிந்து விட்டது. இதனால் அங்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் பைக், கார் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் இரவு நேரத்தில் விபத்துகளில் சிக்கினர். இந்த வேகத் தடைகளில் அடையாளம் தெரியுமாறு பெயின்ட் அடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டை வந்த திருவள்ளூர் எஸ்பி சிபாஸ் கல்யாண் வேகத்தடைகளில் பெயின்ட் அடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் டிஎஸ்பி கணேஷ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ஏழுமலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் விபத்துகளை தடுக்க ஊத்துக்கோட்டை – திருவள்ளுர் சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு பெயின்ட் அடிக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறையினருக்கு கடிதம் எழுதினர். அதன் பேரில் நெடுஞ்சாலை துறையினர் திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடையில் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் சாலையில் வாகன விபத்துகளை தடுக்க வேகத்தடைகளுக்கு பெயின்ட்: எஸ்பி உத்தரவால் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Oothukottai- ,Thiruvallur road ,SP Uttarawal Highway Department ,Oothukottai ,Thiruvallur ,
× RELATED ஊத்துக்கோட்டை பேரூராட்சி...