×

வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட குப்பை குவியலை அகற்ற முகத்துவாரங்களில் தீவிர தூய்மை பணி: மாநகராட்சி நடவடிக்கை


சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய நீர், அடையாறு ஆறு, கூவம் கால்வாய் வழியாக சென்று கடலில் கலந்தது. இந்த வெள்ள நீரில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் அடித்து வரப்பட்டு, முகத்துவார பகுதிகளில் மலைபோல் குவிந்தன. இவற்றை அகற்றும் பணி மாநகராட்சி சார்பில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நேப்பியர் பாலம் கூவம் ஆற்றின் முகத்துவார பகுதி, பட்டினப்பாக்கம் முகத்துவார பகுதி ஆகியவற்றில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை, தீவிர தூய்மைப்பணியின் கீழ் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், கடந்த 14 நாட்களாக ஈடுபட்டு, பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக சென்னையில் தினசரி சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும். ஆனால், புயல், கனமழைக்கு பிறகு, கடந்த 14 நாட்களாக 1 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.

33 சிறு கால்வாய்கள், நீர்வளத்துறையின் 14 கால்வாய்கள், அடையாறு, கூவம் மற்றும் கொசஸ்தலையாறு உள்ளிட்ட நீர்நிலைகள் கடலில் சென்று சேரும் எண்ணூர், நேப்பியர் பாலம், கோவளம் முட்டுக்காடு மற்றும் அடையாறு ஆகிய 4 முகத்துவாரப் பகுதிகளில் கனமழையால் அடித்து வரப்பட்ட கழிவுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அதிகளவில் அகற்றப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நீர்நிலைகளில் குப்பை கழிவுகளை கொட்டுவதன் காரணமாக இவ்வாறான குப்பை சேகரமாகிறது. இதில் பெரும்பாலும், பிளாஸ்டிக், தெர்மாகோல், செருப்பு, பாட்டில்கள் உள்ளிட்ட இதர கழிவுப் பொருட்கள் அதிகம்.

இவ்வாறான கழிவுகள் நீர் சென்று சேரும் இடங்களில் அடைப்புகளை ஏற்படுத்தி மழைநீர் செல்வதை தடைசெய்கிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் நீரோட்டம் தடைபட்டு, குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதுமட்டுமின்றி கொசு உற்பத்தி, துர்நாற்றம் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் குப்பை கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதை முற்றிலும் தவிர்த்து, அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் மட்டுமே கொட்ட வேண்டும். அதை மீறி நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான காலி மனைகளில் சேகரமாகும் குப்பை அகற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் நீரை காலிமனைகளில் விடுகின்றனர். இதனை அகற்றுவது மிகப்பெரும் சவாலாக உள்ளது. எனவே, மாநகராட்சியுடன் பொதுமக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,’’ என்றனர்.

The post வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட குப்பை குவியலை அகற்ற முகத்துவாரங்களில் தீவிர தூய்மை பணி: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adyar river ,Koovam canal ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...