×

செங்கம் அருகே இன்று சினிமா பாணியில் சுற்றிவளைப்பு; சொகுசு காரில் கடத்திய ரூ10 லட்சம் குட்கா சிக்கியது: 2 ஆசாமிகளுக்கு வலை


செங்கம்: செங்கம் அருகே இன்று காலை வெளிமாநில சொகுசு காரில் கடத்திய ரூ10 லட்சம் மதிப்புள்ள 77 மூட்டை குட்காவை போலீசார் சினிமா பாணியில் சுற்றிவளைத்து பிடித்தனர். இதுதொடர்பாக 2 பேரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் போலீசார் இன்று அதிகாலை வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக குஜராத் மாநில பதிவெண் கொண்ட சொகுசுகார் வேகமாக சென்றது. அதனை சந்தேகத்தின்பேரில் நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர், தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டு வேகமாக காரை ஓட்டி சென்றார்.

இதனால் உஷாரான போலீசார், உடனடியாக செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு காரை பின்தொடர்ந்தனர். மேலும் தகவலறிந்த டவுன் போலீசார், சொகுசு கார் வரும் திசை நோக்கி எதிரே வேகமாக சென்றனர். திருவள்ளுவர் நகர் அருகே எதிர்திசையில் சொகுசு கார் வருவதை அறிந்த போலீசார், உடனடியாக அந்த காரின் எதிரே சினிமா பாணியில் தங்களது ஜீப்பை குறுக்கே நிறுத்தி மடக்கினர். இதனால் காரை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு அதில் வந்த 2 பேர் இறங்கி தப்பியோடி விட்டனர். இதையடுத்து மேல்செங்கம் மற்றும் செங்கம் போலீசார், அந்த காரை சோதனை செய்தபோது 77 மூட்டைகளில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது ெதரிந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ₹10 லட்சம் என கூறப்படுகிறது.

இதையடுத்து குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். இவற்றை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இருப்பினும் தப்பிய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று குஜராத் பதிவெண் கொண்ட சொகுசு கார், விபத்தில் சிக்கிய நிலையில் அதில் குட்கா பொருட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post செங்கம் அருகே இன்று சினிமா பாணியில் சுற்றிவளைப்பு; சொகுசு காரில் கடத்திய ரூ10 லட்சம் குட்கா சிக்கியது: 2 ஆசாமிகளுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Chengam ,GUDKA WORTH ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்