×

மார்கழியால் கொட்டித்தீர்க்கும் பனி போடிமெட்டு மலைச்சாலையில் தடுமாறும் வாகனங்கள்

* இரவாக மாறுகிறது பகல்

* டிரைவர்கள் கடும் அவதி

போடி : போடிமெட்டு மலைச்சாலையில், தற்போது மார்கழி மாதத்தையொட்டி அதிக அளவில் பனி கொட்டுகிறது. இதனால் பகலும் இரவு நேரமாக மாறுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றன.போடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் குரங்கணி போடி மெட்டு அமைந்துள்ளது. இயற்கையின் கருணைகளான மலைகளிடம் உருவான பாசப்பிணைப்பால் அவை, ஒன்றையொன்று பிரியாமல் தொடர்ச்சியாக அமைந்துள்ளன. இப்பகுதியில் விவசாயத்தை பெருக்குதல், தமிழகம்.

கேரளா மாநிலங்களின் உயர்ந்த மலைப்பகுதிகளை சாலை மார்க்கமாக இணைத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக போடி தொகுதியின் முதல் எம்எல்ஏ சுப்புராஜ் முயற்சியின் பேரில் போடியில் உள்ள மலையின் அடிவாரப்பகுதியில் இருந்து பல்வேறு மேடு பள்ளங்களை கடத்து மலையின் உச்சிப்பகுதி வரை 21 கிலோ மீட்டர் தூரத்திற்கான குறுகிய சாலை உருவாக்கப்பட்டது.
இந்த சாலையின் ஒருபுறம் பல்லாயிரம் அடி பள்ளங்கள் இருப்பதால், வாகனங்களை பாதுகாக்கும் வகையில் சாலையோர தடுப்புச் சுவர்கள், ஓடைகள் வழிந்தோறும் இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டன.

இதன் முடிவில் 1963ம் ஆண்டு தமிழக முதலமைச்சர் காமராஜ் இந்த மலைச்சாலையை திறந்து வைத்தார். ஏற்கனவே 1926ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போடி சுப்புராஜ் நகரிலிருந்து மதுரை வரை 90 கிலோ மீட்டர் தூரம் குறுகிய ரயில்வே சாலை அமைக்கப்பட்டது. இதில் போடிமெட்டு மலைச்சாலையும் சேர்ந்து விட்டதால் அனைத்து தரப்பினரின் போக்குவரத்திற்கும் இன்றியமையாத ஒன்றாக இன்றுவரை இருந்து வருகிறது.

இந்த இரண்டு போக்குவரத்துகளும் எதிர்கால சந்ததியினரின் விரைவான போக்குவரத்து மற்.றும் வாழ்க்கை முறைகளின் மாற்றங்களை கருத்தில் கொண்டும் இரு மாநில மேம்பாடுகளை உள்ளடங்கியும் தொடங்கப்பட்டது. இது எதிர்காலத்தில் மிகப்பெரும் சுற்றுலாச்சாலையாக மாறும் என்று அப்போதே கணிக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் பேரில் இந்த சாலை இப்பகுதி மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாக தற்போது மாறியுள்ளது.

தமிழகத்தை அடுத்துள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பணப்பயிர்களான ஏலம், காபி, மிளகு, தேயிலை உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்படுகிறத. இவை முதலாளிகள் மட்டுமின்றி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்தும் பயிர்களாக உள்ளன. இப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தமிழர்களாகவே உள்ளனர். இவர்கள் கேரளா விவசாயிகளுடைய இணைந்து தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி அனைவருக்கும் அவசியமானதாக இரு மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த மலைச்சாலையில் வருடத்தில் 8 மாதம் மழை பெய்யும். அடுத்து வரும் பனி மற்றும் குளிர் காலங்களில் அதிக அளவு மேகங்கள் திரண்டு இரவில் மட்டுமின்றி பகலிலும் காணப்படுகிறது. இதற்கிடையே தற்போதைய மார்கழி மாதம் பனி நிறைந்தது. இந்த நேரத்தில் இச்சாலையில் மூடுபனி அதிகமாக இருக்கிறது. இந்த பனி ஒட்டுமொத்த மலைப்பகுதியையும் மறைத்துக்கொள்கிறது.

இதனால் இப்பகுதி பகலிலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த மலைச்சாலையில் அடிவாரத்தில் இருந்து மேல்பகுதிக்கு செல்லும் வழியில் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இவற்றை கடந்தால் மட்டுமே கேரள மாநிலம் பூப்பறை, மூலத்துறை, யானை இரங்கல், பெரியகானல், முட்டுக்காடு, தேவிகுளம், லாக்காடு, மூணாறு ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். தற்போது இப்பகுதியில் அதிகரித்துள்ள மூடுபனியால் சாலையில் வானங்களின் பயணம் மிக ஆபத்தானதாக மாறியுள்ளது.

இதன் எதிரொலியாக வழக்கமாக இச்சாலையில் பயணிக்கும் தமிழக மற்றும் கேரள மாநில அரசு பஸ்கள் மற்றும் தேயிலை தோட்ட வாகனங்களின் டிரைவர்களே தடுமாறும் நிலை உருவாகியுளள்து. இதற்கிடையே புதிதாக மலைச்சாலையில் வரும் பொதுமக்கள் மற்றும் டாக்சி டிரைவர்கள் மூடுபனியின் காரணமாக வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

இருப்பினும் பலரும் ஒருவித துணிச்சலுடன் தங்கள் பயணத்தை தொடர்கின்றனர். இந்த பயணம் மிக ஆபத்தானது என அவர்கள் உணர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் இச்சாலையில் கரணம் தப்பினால் மரணம் என்பது 100 சதவீதம் உண்மையாகும்.

மூன்றடி தூரம் சாலை தெரியும்…

போடிமெட்டு மலைச்சாலையில் இரவில் பயணிப்பது மிகமிக ஆபத்தானது. ஏனெனில் வாகனத்தின் முன்புறம் இருக்கும் விளக்குகள் பளீரென எரியும் நிலையிலும், சுமார் 3 அடி தூரத்திற்கு மட்டுமே வாகனம் ஓட்டுபவருக்கு சாலை தெரியும். அதற்கடுத்து சாலை எந்த திசையில் திரும்புகிறது என்பதை அந்த மூன்றடியை கடந்தால் மட்டுமே உணர முடியும். இந்த ஆபத்தை அறியாமல் சிறிது வேகமாக சென்றாலும், திடீரென ஏற்படும் சாலை மாற்றத்தில் சிக்கி வாகனம் பெரும் விபத்தை சந்திக்க நேரிடும். பொதுவாக போடிமெட்டு மலைச்சாலையில் இரவு நேரத்தில் வாகனங்களை அனுமதிப்பதில்லை. இருப்பினும் சிலர் சாகக பயணம் என்று விதிகளை மீறி பயணத்தை தொடர்கின்றனர்.

The post மார்கழியால் கொட்டித்தீர்க்கும் பனி போடிமெட்டு மலைச்சாலையில் தடுமாறும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Podimetu ,Margazhi ,Podimettu ,Dinakaran ,
× RELATED போடி அருகே குரங்கணி பிரிவில் சாலை...