×

பழுதடைந்த பைக்காரா படகு இல்ல சாலை சீரமைக்கப்படுமா?

*ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு

ஊட்டி : ஊட்டி அருகே பைக்காரா அணை மற்றும் படகு இல்லம் செல்லும் சாலை சாலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள், வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் வழித்தடத்தில் சுமார் 20 கி.மீ. தொலைவில் பைக்காரா அணை உள்ளது. இந்த அணையில் சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் படகு இல்லம் அமைக்கப்பட்டு படகு சவாரி மேற்க்கொள்ளப்படுகிறது. நாள்தோறும் இந்த படகினத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

குறிப்பாக, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக செல்கின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை விடுமுறை மற்றும் ஏதேனும் தொடர் விடுமுறை நாட்கள் வந்தால், பைக்காரா அணை சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டுகிறது. இந்த அணைக்கு செல்ல வேண்டுமானால் ஊட்டி – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் வனப்பகுதிகளின் வழியாக செல்ல வேண்டும்.

நீலகிரி வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது, சாலையின் பெரும்பாலான இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில், பயணிக்கும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இரு சக்கர வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் பலர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். பைக்காரா அணைக்கு செல்ல வனத்துறை மூலம் நுழைவு கட்டணம் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இச்சாலையை சீரமைக்க வனத்துறை எவ்வித முயற்சிகளும் மேற்கொள்வதில்லை. மேலும், சாலை சீரமைப்பு பணிகளை மற்ற துறையிடமும் வழங்குவதில்லை.

இதனால், சாலை நாளுக்கு நாள் பழுதடைந்து கொண்டே செல்கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

The post பழுதடைந்த பைக்காரா படகு இல்ல சாலை சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Baikara boat ,Baikara Dam ,Boat House ,Ooty ,Baikara ,Dinakaran ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்