×

வீடுகளுக்குள் சேறு படிந்து துர்நாற்றம் தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதியில் இரவு, பகலாக மீட்பு பணி

*டூவீலர்கள் ஆயிலுக்கு கடும் கிராக்கி

தூத்துக்குடி : தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த 600 தூய்மைப்பணியாளர்கள் சேறு, சகதிகளை இரவு பகலாக அகற்றி வருகின்றனர். மாநகரில் டூ வீலர்களுக்கு பயன்படுத்தும் ஆயிலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. தூத்துக்குடி மாநகர பகுதியில் பெரும்பாலான குடியிருப்புகளில் வெள்ளம் படிப்படியாக குறைந்து தற்போது முழங்கால் அளவுக்கு வந்துள்ளது. இருப்பினும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் சேறும், சகதியும் படிந்து துர்நாற்றம் வீசுகிறது.

இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிற மாவட்டங்களிலிருந்து வந்த தூய்மைப்பணியாளர்கள் 600பேர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களால் கழிக்கப்பட்ட பொருள்களை அகற்றி லாரிகளில் எடுத்துச்சென்றனர். மேலும் வெள்ளநீரால் தெருக்களில் படிந்த சேறால் வழுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-தூத்துக்குடி ஆகிய பிரதான சாலைகள் சீரமைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக மாற்றுப்பாதைகளிலும், தற்காலிக பாதைகள் வழியாகவும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 நாட்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகரில் ஆசிரியர் காலனி, கந்தன் காலனி, அசோக்நகர், அன்னை தெரசா நகர், நிகிலேசன் நகர், கதிர்வேல் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத்நகர், குறிஞ்சி நகர், அம்பேத்கர் நகர், திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம், பூப்பாண்டியாபுரம், அலங்காரத்தட்டு, ஊரணி ஒத்தவீடு, காதர்மீரான் நகர், வஉசிநகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டாலும் வீடுகளுக்குள் புகுந்த, சேறு சகதிகளை பொதுமக்கள் சிரமத்துடன் அகற்றி வருகின்றனர்.

பாத்திரங்கள், வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் வீணாகி விட்ட நிலையில் மக்கள் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்கள் தாங்கள் பகுதியில் தேங்கிய வெள்ள நீரை அகற்ற மின் மோட்டார்கள் வாடகைக்கு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.தூத்துக்குடியில் 112 இடங்களில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு அடித்துச்செல்லப்பட்ட நிலையில் 84 இடங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள், பாலங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மாநகரில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டூ வீலர்கள் பழுதுபட்டுள்ளன.

இந்த டூ வீலர்களை ஒர்க்‌ ஷாப்களிலும், ஆங்காங்கே தெருக்களின் நடுவிலும் நிறுத்தி மெக்கானிக்குகள் பழுதுபார்த்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் மழையால் பழுதான 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டூ வீலர்களுக்கான ஏர்பில்டர், இன்ஜின் ஆயிலுக்கு தூத்துக்குடியில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்பேர்பார்ட்ஸ் விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கணக்கான இடங்களில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் தொடர்ந்து நடந்து வருகிறது.வெள்ளம் குறைந்து வெள்ள நீர் மெல்ல, மெல்ல வடிந்து வந்தாலும், வெள்ளம் பாதித்த பகுதிகளின் மக்கள் தங்கள் குடியிருப்புகள், உடைமைகளை இழந்ததால் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பரிசல் மூலம் உணவு பொருட்கள்

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தண்ணீரில் தத்தளிக்கும் முத்தம்மாள்காலனி, குறிஞ்சிநகர், ரகுமத்நகர், தனசேகர் நகர் உள்ளிட்ட மக்கள் இந்த ஆண்டும் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றனர். இதே போன்று கே.வி.கே.நகர், ராம்நகர், ஆதிபராசக்திநகர், பூப்பாண்டியாபுரம், கே.டி.சி.நகர், மாதாநகர் உள்ளிட்ட பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இங்கு மழைநீரை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. திரு.வி.க.நகர், இந்திரா நகர் பகுதியிலும் மழைநீர் தேங்கி நிற்பதால், பரிசல்கள் மூலம் உணவு பொருட்கள், நிவாரண பொருட்கள் கொண்டு சென்று மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

8 நாட்களாகியும் வடியாத தண்ணீர்

மழை பெய்து 8 நாட்கள் ஆகியும், மழை வெள்ளம் வடியாததால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. பூச்சிகள், விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பினாலும், இந்த பகுதி மக்களின் சோகம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதனால் மழைநீரை விரைந்து வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். பூப்பாண்டியாபுரம், கேவிகே நகர் பகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் 4 அடிக்கு தேங்கியுள்ள மழை நீரை அகற்றவேண்டும், நிவாரண உதவிகளை பாரபட்சமின்றி வழங்கவேண்டும் என கோரி இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

The post வீடுகளுக்குள் சேறு படிந்து துர்நாற்றம் தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதியில் இரவு, பகலாக மீட்பு பணி appeared first on Dinakaran.

Tags : Mud ,Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...