×

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*கடும் பனிமூட்டம்-சாரல் மழையில் குதூகலம்

ஏற்காடு : அரையாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள், கடும் பனிமூட்டம்-சாரல் மழையில் குதூகலித்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால், சுற்றுலா தலங்களில் குடும்பத்துடன் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நேற்று பல்வேறு இடங்களிலிருந்து வந்து குவிந்தனர்.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டைய மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வந்திருந்தனர். இதனால், எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தலைகளாகவே காணப்பட்டது.

அதேவேளையில், ஏற்காட்டில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனிமூட்டம் நிலவியது. அவ்வப்போது, சாரல் மழையும் பெய்தது. இதனால், கடும் குளிர் வாட்டியெடுத்தது. அதனை பொருட்படுத்தாமல் பூங்காக்களில் குவிந்த சுற்றுலா பயணிகள் பொழுது போக்கினர். பூக்களை கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். ஏற்காடு மையப்பகுதியில் அமைந்துள்ள ஏரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

கடும் பனிமூட்டம் சாரல் மழை காரணமாக மிதிப்படகு நிறுத்தப்பட்டது. இதனால், துடுப்பு மற்றும் மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டது. மேலும், கடும் பனிமூட்டம் காரணமாக மலைப்பாதையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கினை எரியவிட்டவாறு சென்றனர். கடும் குளிரால் டீக்கடை மற்றும் பஜ்ஜி கடை, ஸ்வீட் கான் கடை, உணவகங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வியாபாரம் களை கட்டியதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிப்பால், விடுதிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

ஸ்வெட்டர், ஜெர்கின் விற்பனை அமோகம்

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத இறுதியில் பனிக்காலம் தொடங்கும். ஆனால், இந்த வருடம் கார்த்திகை மாத தொடக்கத்திலேயே துவங்கி விட்டது. இதனால், ஏற்காட்டில் வழக்கத்திற்கு மாறாக கடும் குளிர் வாட்டியெடுத்து வருகிறது. குளிரை சமாளிப்பதற்காக உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணிகளிடையே ஸ்வெட்டர் மற்றும் ஜெர்க்கின், குல்லா பயன்பாடு அதிகரித்துள்ளது. இதையடுத்து, அவற்றின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பொருந்தும் அளவுகளில், வெவ்வேறு வண்ணங்களில் ஸ்வெட்டர், குல்லா, ஜெர்கின் கிடைப்பது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Christmas ,
× RELATED ஏற்காடு கோடை விழா 22ம் தேதி தொடக்கம்