×

‘2024ல் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும்’ சந்திரபாபு மகனுக்கு கிறிஸ்துமஸ் பரிசு அனுப்பி ஷர்மிளா வாழ்த்து: ஆந்திர அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு

திருமலை: ‘2024ல் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும்’ என ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் மகன் நாரா லோகேசுக்கு, ஷர்மிளா கிறிஸ்துமஸ் பரிசு அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் ஆந்திர அரசியலில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் மகன் நாராலோகேஷ். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார். இவருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கையும், தெலங்கானா மாநில ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா, கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி பரிசுகளை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வாழ்த்தில், ‘ஒய்எஸ்ஆர் குடும்பம் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியாக இருக்கட்டும். வரும் 2024ம் ஆண்டு உங்களுக்கு அனைத்து நல்லதும் நடக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து நாராலோகேஷ், தனது ‘எக்ஸ்’ தளத்தில் ஷர்மிளாவுக்கு ‘கிறிஸ்துமஸ் பரிசுக்கு மனப்பூர்வமான நன்றி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை நாரா குடும்பம் தெரிவித்துக்கொள்கிறது’ என பதிவிட்டுள்ளார். மேலும் ஷர்மிளா அனுப்பிய பரிசுகளின் புகைப்படங்களையும் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆந்திராவில் சட்டசபை தேர்தல் நேரம் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுவை சந்தித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெற்றியில் முக்கிய பங்காற்றிய பிரசாந்த் கிஷோர், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுவை சந்தித்தது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, சந்திரபாபுவின் குடும்பத்தினருக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு பரிசுகளை அனுப்பியது பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை வீழ்த்த அவரது தங்கை ஷர்மிளாவை களமிறக்க காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அதற்கேற்ப ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் கிடுகு ருத்ர ராஜு, ‘ஆந்திர அரசியலில் அடுத்த 100 நாளில் யாரும் எதிர்பாராத மவுன புரட்சி நடக்கும்’ என தெரிவித்திருந்தார். இதுபோன்ற நிகழ்வுகள் ஆந்திர அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

The post ‘2024ல் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும்’ சந்திரபாபு மகனுக்கு கிறிஸ்துமஸ் பரிசு அனுப்பி ஷர்மிளா வாழ்த்து: ஆந்திர அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sharmila ,Christmas ,Chandrababu ,Tirumala ,chief minister ,Nara Lokesh ,
× RELATED பாலாற்றில் புதிய தடுப்பணை...