×

பாக்சிங் டே டெஸ்ட் தொடர்கள்: தென் ஆப்ரிக்கா- இந்தியா, ஆஸ்திரேலியா-பாகிஸ்தான்

தென் ஆப்ரிக்கா-இந்தியா: தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை சூரியகுமார் தலைமையில் டிரா செய்தது. கேஎல் ராகுல் தலைமையில் ஒருநாள் தொடரை வென்றது. இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 ஆட்டங்களை கொண்ட ‘ஃபிரீடம் கோப்பை’ டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. காயமடைந்துள்ள டெம்பா பவுமா தலைமையில் தெ.ஆ அணி எதிர்த்து விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் இன்று ‘பாக்சிங் டே’ ஆட்டமாக செஞ்சூரியனில் தொடங்குகிறது. அஷ்வினை அணியில் சேர்ப்பார்களா என்பதை தவிர இன்றைய டெஸ்ட்டில் எந்த புதிய எதிர்பார்ப்புகள் இல்லை. கூடவே இந்தியா இதுவரை தென் ஆப்ரிக்காவில், அந்த அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை என்ற வரலாறு உள்ளது.

* இதுவரை இந்த 2 நாடுகளுக்கு இடையே நடந்த 42டெஸ்ட்களில் இந்தியா 15லும், தெ.ஆ 17லும் வென்றுள்ளன. மேலும் 10 ஆட்டங்கள் சமனில் முடிந்துள்ளன.
* தெஆ வில் நடந்த 23 டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியா 4ல் மட்டும் வெற்றி பெற, தெஆ 12ல் வென்று ஆதிக்கம் செலுத்திவருகிறது. கூடவே 7 ஆட்டங்கள் டிரா.
* இவ்விரு அணிகளுக்கும் இடையில் இதுவரை 15 டெஸ்ட் தொடர்கள் நடந்துள்ளன. அவற்றில் 8 தொடர்கள் இந்தியாவிலும், 7 தொடர்கள் தெஆ விலும் நடந்தன.
* இந்தியா வென்ற 4 தொடர்களும் இந்தியாவில் நடந்தவை. மேலும் டிராவில் முடிந்த 3 தொடர்களில் 2 இந்தியாவிலும், ஒன்று தெஆவிலும் நடந்தன.
* தெஆ அணி இந்தியாவில் 2 தொடர்களிலும், தெ.ஆவில் 6 தொடர்களிலும் வென்றுள்ளது. முக்கியமான விஷயம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் தெ.ஆ தொடரை இழந்ததே இல்லை’ என்பதுதான்.

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான்: ஆஸி சென்றுள்ள பாக் 2 ஆட்டங்களை கொண்ட ‘பெனாட்-காதிர் கோப்பை’ டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸி 360 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. அதனால் ஆஸி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இப்போது ‘பாக்சிங் டே’ டெஸ்ட்டான 2வது ஆட்டம் வழக்கம் போல் மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியனான பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி அணி இந்த முறையும் பைனலுக்கு முன்னேற தொடர் வெற்றி அவசியம். அதே நேரத்தில் பாக் அணிக்கு முதல்முறையாக கேப்டனாகி உள்ள ஷான் மசூத் முதல் தொடரை டிரா செய்ய முனைப்புக் காட்டுவார்.
* இந்த 2 அணிகளும் இதுவரை 70 டெஸ்ட்களில் விளையாடி உள்ளன. அவற்றில் ஆஸி 35, பாக் 15 டெஸ்ட்களில் வென்றுள்ளன. கூடவே 20ஆட்டங்கள் டிரா.
* ஆஸியில் வெற்றி தோல்வியில் முடிந்த 31 டெஸ்ட்களில் ஆஸி 27-4 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* இவ்விரு அணிகளுக்கும் இடையில் நடந்த 25 டெஸ்ட் தொடர்கள் நடந்துள்ளன.
* இந்த தொடர்களில் 4 டெஸ்ட் தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன. பாக். 7 தொடர்களையம், ஆஸி. 14 தொடர்களையும் வென்றுள்ளன.
* பாக் வென்ற பல டெஸ்ட் தொடர்கள், ஆட்டங்கள் பாகிஸ்தானில் மட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கையில் நடந்தவை.
* குறிப்பாக பாக் வென்ற 7 தொடர்களில் 5 பாகிஸ்தானிலும், 2 தொடர்கள் பாகிஸ்தானுக்கு பதில் அமீரகத்திலும் நடந்தவை.
* முக்கியமான விஷயம் இதுவரை ஆஸியில் ஒரு டெஸ்ட் தொடரை கூட பாக் வென்றதில்லை.

* செஞ்சூரியன்/மெல்போர்ன்: தென் ஆப்ரிக்கா-இந்தியா, ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான ‘பாக்சிங் டே டெஸ்ட்’ ஆட்டம் இன்று தொடங்குகிறது. கூடவே இந்த தொடர்கள் ‘ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்’ போட்டிக்கானவை என்பதால் 4 அணிகளுக்கும் வெற்றி அவசியம்.

* பாக்சிங் டே
கிறிஸ்துமஸ் விழாவுக்கு பெட்டி (பாக்ஸ்), பெட்டியாக வரும் பரிசுப் பொருட்களை மறுநாள் திறந்து பார்ப்பார்கள். அதனால் டிச.26ம் தேதியை ‘பாக்சிக் டே’ என்று கிறிஸ்துமஸ் கொண்டாடப் படும் நாடுகளில் அழைக்கப்படும். அன்று கேளிக்கைகளை காணவும், முக்கிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதும் வழக்கம். அவற்றில் ஒன்று விளையாட்டுகளை காணப் போவது. அந்த வகையில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் அந்த நாடுகளில் முக்கியத்துவம் பெறுகிறது. ‘பாக்சிங் டே’ ஆட்டம் என்பது கால்பந்து, ரக்பீ என மற்ற விளையாட்டுகளுக்கும் பொருந்தும்.

* முதல் இடத்தில் இந்தியா
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும், பாகிஸ்தான் 2வது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா 5வது இடத்தில் இருக்கிறது. புள்ளி கணக்கை தொடங்காத தென் ஆப்ரிக்காவுக்கு இதுதான் முதல் டெஸ்ட்.

The post பாக்சிங் டே டெஸ்ட் தொடர்கள்: தென் ஆப்ரிக்கா- இந்தியா, ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Boxing Day Test Series ,South ,Africa ,India ,Australia ,Pakistan ,South Africa ,T20 ,Suryakumar ,KL Rahul… ,Dinakaran ,
× RELATED நெஸ்லே குழந்தைகள் உணவில் அதிக...