×

ஏழைகள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரமளிக்க முன்னுரிமை: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ஏழைகள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரமளிப்பதே பாஜ அரசின் முன்னுரிமையாகும் என பிரதமர் மோடி கூறினார். ம.பி.யின் இந்தூர், ஹூக்கும்சந்த் மில் தொழிலாளர்கள் 4,800 பேருக்கு ரூ.224 கோடி நிலுவை தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில்,காணொலி காட்சி வாயிலாக மோடி பேசுகையில்,‘‘ ஒன்றியத்திலும், மாநிலத்திலும் உள்ள பாஜவின் இரட்டை இன்ஜின் ஆட்சியில் இந்தூர் நகருக்கான திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 1992ல் ஹூக்கும்சந்த் மில் மூடப்பட்டது. தங்கள் ஊதியத்தை வழங்கக்கோரி தொழிலாளர்கள் பல ஆண்டு போராட்டங்கள் நடத்தினர். மத்திய பிரதேச அரசு எடுத்த முயற்சியின் பலனாக மாநில வீட்டு வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம், தொழிலாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 20ம் தேதி நிலுவை தொகை வழங்க ஒப்பந்தம் ஆனது. மபி.யுடன் வாஜ்பாய்க்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. அவரது பிறந்த நாள் நல்லாட்சி தினமாகவும் கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்களுக்கு ரூ. 224 கோடியை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஒரு பொன்னான எதிர்காலம் உள்ளது. ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகிய 4 பிரிவினர் தான் சமூகத்தில் மிக பெரிய சாதிகள் என்று ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளேன். ஏழைகள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு கண்ணியம் மற்றும் மரியாதையை வழங்குவதே அரசின் முன்னுரிமையாகும்’’ என்றார்.

The post ஏழைகள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரமளிக்க முன்னுரிமை: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,New Delhi ,BJP government ,Indore ,Hookumchand ,Dinakaran ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?