×

இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான காசா போரை முடிவுக்கு கொண்டு வர புதிய திட்டம் வகுத்தது எகிப்து: இடைக்கால பாலஸ்தீன அரசை உருவாக்க யோசனை

கெய்ரோ: இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வந்து, நிபுணர்கள் அடங்கிய இடைக்கால பாலஸ்தீன அரசை உருவாக்குவது குறித்து எகிப்து புதிய திட்டத்தை வகுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் போராளிகள் கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கடும் தாக்குதல் நடத்தினர். பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் 3வது மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போரால் காசா முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர்.

இப்போரை நிறுத்த எகிப்து, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. காசா போரை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வர எகிப்து புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக 2 வாரகால போர் நிறுத்தம் அமல்படுத்த வேண்டும். அதில், ஹமாசிடம் எஞ்சியுள்ள 129 பிணைக் கைதிகள் பாதி பேரை விடுவிக்க வேண்டும். அதே போல இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, ஹமாஸ் உள்ளிட்ட அனைத்து பாலஸ்தீன அமைப்புகளுடன் இணைந்து நிபுணர்கள் அடங்கிய இடைக்கால பாலஸ்தீன அரசை உருவாக்க வேண்டும். அந்த அரசு காசாவில் ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்யும்.

இந்த திட்டம் கத்தார் அரசுடன் இணைந்து வகுக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பரிசீலனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தில் ஹமாசை முற்றிலும் ஒழிப்பது, நீண்ட காலத்திற்கு காசாவில் இஸ்ரேலின் ராணுவ கட்டுப்பாட்டை வைத்திருப்பது போன்ற அம்சங்கள் இடம் பெறவில்லை. இதனால் இதற்கு இஸ்ரேல் சம்மதிக்க வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. அதேசமயம் இத்திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அது இறுதி செய்யப்படும் என்றும் எகிப்து அதிகாரிகள் கூறி உள்ளனர்.

* 106 அகதிகள் பலி
மத்திய காசாவில் உள்ள மகாஸி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில் 106 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான காசா போரை முடிவுக்கு கொண்டு வர புதிய திட்டம் வகுத்தது எகிப்து: இடைக்கால பாலஸ்தீன அரசை உருவாக்க யோசனை appeared first on Dinakaran.

Tags : Egypt ,Gaza ,Israel ,Hamas ,Cairo ,Palestinian government ,Gaza war ,Dinakaran ,
× RELATED காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர...