×

தூத்துக்குடி, நெல்லையில் 750 இடங்களில் உடைப்பு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணி நடந்து வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீன கூறினார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது ஓரளவுக்கு வெள்ளம் வடிந்த பகுதிகளில் சீரமைப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நேற்று இரண்டாவது நாளாக காலாங்கரை கிராமத்தில் கோரம்பள்ளம் குளம் மறுசீரமைப்பு பணி நடந்து வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மழை, வெள்ளத்தால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் குளம் உடைப்பு போன்று 750 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அனைத்து சீரமைப்பு பணிகளையும் கடந்த 2 நாட்களாக பார்வையிட்டு வருகிறோம். தற்போது வரை 50 சதவீதத்திற்கு மேல் பணிகள் நிறைவடைந்துள்ளன.

விரைவில் அனைத்து பணிகளும் முழுமையாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய சாலைகள், பாலங்கள் என 175 இடங்கள் உடைந்துள்ளன. கனமழையினால் ஏற்பட்டுள்ள அனைத்து சேதங்களையும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் மூலம் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி விரைவாக நடந்து வருகிறது.

மேலும் அனைத்து சேதங்களையும் கணக்கெடுப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கணக்கெடுப்பு பணி 3 நாட்களுக்குள் முடிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிவாரணத்தொகை பொதுமக்களுக்கு வழங்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சியில் தாழ்வான தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரை 200 பம்புகள் மூலம் அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும் தெருக்களில் மழை, வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள், மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடக்கிறது. நேற்றைய கணக்கெடுப்பின்படி சுமார் 3,500 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரியவருகிறது. மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான குடிநீர், சாலை வசதி, பால், மின் விநியோகம் உள்ளிட்டவை பெரும்பாலான இடங்களில் செய்து தரப்பட்டுள்ளன. சென்னையில் வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சரிசெய்வதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பு முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள சுமார் 175 உடைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில் 150 உடைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமிருக்கும் உடைப்புகளும் சரிசெய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகின்றன. மறுசீரமைப்பு பணிகளில் அரசு பணியாளர்கள் ஓய்வின்றி இரவு, பகல் பாராமல் மக்களுக்காக பணி செய்து வருகிறார்கள். இவ்வாறு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் னா கூறினார்.

The post தூத்துக்குடி, நெல்லையில் 750 இடங்களில் உடைப்பு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi, Nella ,Chief Secretary ,Shivdas Meena ,SPIGNAGAR ,TOOTUKUDI DISTRICT ,Tuticorin, Nella ,
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை