×

36வது நினைவு தினம்; எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் தனித்தனியாக மரியாதை

சென்னை: 36வது நினைவு தினத்தையொட்டி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 36வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். இதையடுத்து எம்.ஜி.ஆர். நினைவிட நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பா.வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுகவின் பெயரையும், கட்சி கொடி, சின்னத்தையும் ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு’ என்ற பெயரில் ஓபிஎஸ் அணியினர் பேனர் பதாகை மற்றும் பேனர்களை வைத்திருந்தனர். இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் நினைவிடத்தில் இருந்தபோது ஜெயலலிதாவின் தோழி சசிகலா அங்கு வந்தார். ஓபிஎஸ் வந்த தகவலை அறிந்து சாலை ஓரமாக காரை நிறுத்தி அவர் சென்ற பின்னர் தனது ஆதரவாளர்களுடன் நினைவிடத்திற்கு சென்று அவர் மரியாதை செலுத்தினார்.

The post 36வது நினைவு தினம்; எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் தனித்தனியாக மரியாதை appeared first on Dinakaran.

Tags : 36th Memorial Day ,EPS – OPS ,MGR ,Chennai ,Edappadi Palaniswami ,O. Panneerselvam ,AIADMK's… ,
× RELATED எம்ஜிஆர் கழகம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்